சின்னத்திரையில் ஸ்டேண்டப் காமெடியானாகவும், மிமிக்ரி கலைஞராகவும் பிரபலமடைந்த நடிகர் ரோபோ சங்கர், தனுஷின் மாரி, விஜயின் புலி, அஜித்தின் விஸ்வாசம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் போன்ற பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தார்.
தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ரோபோ சங்கர், திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை மற்றும் நீர்சத்து குறைபாடுகளுக்கு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் இன்று படப்பிடிப்பு தளத்தில் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறந்த நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரான ரோபோ சங்கரின் இழப்புக்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
கமல்ஹாசன்: ”ரோபோ சங்கர் ரோபோ புனைப்பெயர் தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் முக ஸ்டாலின்: "திரைக்கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
திரைக்கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி. சின்னத்திரை வண்ணத்திரை என விரிந்து. தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் திரு. ரோபோ சங்கர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: “பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான திரு. ரோபோ ஷங்கர் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்புச் சகோதரர் #RoboShankar அவர்களின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என கூறியுள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன்: சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
செல்வப்பெருந்தகை: தமிழ் திரையுலகில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் மக்களின் இதயத்தில் நிலைத்து நின்ற நடிகர் திரு.ரோபோ சங்கர் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தனது இயல்பான கலை வெளிப்பாட்டாலும், எளிமையான வாழ்வியலாலும், அவர் மக்களின் அன்பை பெற்றுச் சென்றார். மக்களை மகிழ்விக்கும் நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களை தொடர்ந்து, தற்போது நடிகர் ரோபோ சங்கர் அவர்களது இழப்பு பேரதிர்ச்சி அளிக்கிறது. கலை துறையில் உள்ள அனைவரும் தங்களது உடல் நலத்தை பேணி காத்திட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன். திரு.ரோபோ சங்கர் அவர்களின் இழப்பு திரையுலகிற்கும், அவரை நேசித்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
எல். முருகன் : சின்னத் திரையிலிருந்து வளர்ந்து, தமிழ்ச் சினிமாவில் தனது தனித்துவமிக்க நகைச்சுவை திறன் மூலமாகவும், குணச்சித்திர வேடங்களின் மூலமாகவும் புகழ்பெற்ற நடிகராகத் திகழ்ந்த நடிகர் ‘ரோபோ’ சங்கர் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் வாடுகின்ற அவரது குடும்பத்தார் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். ஓம் சாந்தி..!
அண்ணாமலை: தனது நகைச்சுவைத் திறனால், தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இடம்பிடித்த திரைக் கலைஞர், திரு. ரோபோ சங்கர் அவர்களது இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. திரு. ரோபோ சங்கர் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
நடிகர் சிலம்பரசன்: நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு. என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே இருக்கும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள்.
இயக்குநர் வெங்கட் பிரபு: மிக விரைவாக போய்விட்டீர்களே நண்பரே. குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
சரத்குமார்: தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமாகி, படிப்படியாக உயர்ந்து தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக பிரபலமான ரோபோ சங்கர் அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இளம் வயதில் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. சமீபத்தில் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்த தருணம் மறக்க முடியாதது. தந்தையின் திடீர் மறைவால் வாடும் அவரது மகளுக்கும், ஈடு செய்ய முடியாத இழப்பால் சோகத்தில் வாடும் குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
டிடிவி தினகரன்: தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு ரோபோ சங்கர் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழ்த் திரையுலகில் தனித்துவமிக்க நடிகராகத் திகழ்ந்த திரு ரோபோ சங்கர் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைக்கலைஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நயினார் நாகேந்திரன்: நடிகர் திரு. ரோபோ சங்கர் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை திறனால், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவலையில் இருந்து மீட்டவர். இவரது மறைவு, திரையுலகிற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்! அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!
டி.ராஜேந்தர்: நடிகர் ரோபோ சங்கர் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர், அவரை நான் இயக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்திருந்தேன். தற்போது அவருடைய மரண செய்தி கேட்டு நெஞ்சம் பொறுக்கவில்லை என்று பேசியுள்ளார்.
ரெடின் கிங்ஸ்லி: சிறந்த நகைச்சுவை நடிகர், அவர் எப்போது மேடையில் பர்ஃபாமன்ஸ் செய்தாலும் நகைச்சுவையாக இருக்கும். அவர் மிகவும் திறமைசாலி, அவருடைய இறப்பு குறித்து என்ன பேசுவதென்றே தெரியவில்லை என உருக்கமாக பேசினார்.