சினிமா

”அப்போதெல்லாம் தினமும் குடி, சிகரெட் தான்!” - ரஜினியின் கலகல பேச்சால் அதிர்ந்த அரங்கம்!

Sinekadhara

நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் புதிதாய் தொடங்கியுள்ள SARP PRODUCTIONS மற்றும் அதன் மூலம் தயாரிக்கப்பட உள்ள "சாருகேசி" திரைப்படம் குறித்த அறிவிப்பு விழாவானது சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

ரஜினிகாந்த் பேசியதன் முழுவிபரம்;-

அன்று என்னை உள்ளேயே அனுமதிக்கவில்லை;

அறிவிப்பை அடுத்து பேசிய ரஜினிகாந்த், “ரகசியம் பரம ரகசியம் நாடகத்தை பார்க்க 45 வருடத்திற்கு முன்பு உள்ளே சென்றபோது, என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் சாருகேசி நாடகத்தின் 50வது விழாவில் தலைமை விருந்தினராக வந்திருக்கிறேன் என்றால் எல்லாம் அந்த காலத்தின் செயல். ஜெயலலிதா, நாகேஷ், சோ, விசு போன்றவர்கள் YGP நாடகக்குழுவின் இருந்து வந்தவர்கள். பாதுகாப்பும் கண்ணியமுமிக்க நாடக குழுவினராக திகழ்ந்தனர். சினிமாவிலும், நாடகத்திலும் கதை திரைக்கதை மிகவும் முக்கியம். படித்தவர்களும் பட்டதாரிகளும் பல துறை வல்லுனர்களும் YGP நாடக குழுவில் இருந்தனர்.

சிவாஜி இருந்தால் மகிழ்ந்திருப்பார்;

சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் இந்த நாடகத்தைக் கண்டு மகிழ்ந்திருப்பார். சிவாஜி கணேசனின் "வியட்நாம் வீடு" போன்று இருந்தது. ஒய்.ஜி மகேந்திரனுக்கு சினிமாவைவிட நாடகம்தான் முக்கியம்.

தினமும் குடிப்பேன், சிகரெட் பிடிப்பேன்!

எனது மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் என்கிற முறையில், ஒய்.ஜி மகேந்திரனுக்கு நான் கடன்பட்டுள்ளேன். நடத்துனராக இருக்கும்போது தினமும் குடிப்பேன், சிகரெட் குடிப்பேன், நாள்தோறும் இரண்டு முறை மாமிசம் சாப்பிடுவேன். சைவப் பிரியர்களை பார்த்தால் அப்போது எனக்கு பாவமாக தெரியும். இதை அளவுக்கு மீறி அதிகம் எடுத்தவர்கள் 60 வயதுக்கு மேல் வாழ்ந்தது இல்லை. இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன.

என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி!

என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி லதா. என்னை ஒழுக்கமிக்கவனாக மாற்றி, என்னை வாழவைத்தவர். ஒய்.ஜி மகேந்திரனுக்கு எனது நன்றி. மது, புகைபிடிக்கும் பழக்கம், அசைவ பழக்கம் போன்றவை ஒரு காலத்தில் என்னோடு ஒட்டி இருந்தது. அதை மாற்றியவர் எனது மனைவி தான்” என்று பேசினார்.

ரஜினிகாந்திற்கு முன்பு மேடையில் பேசிய ஒய்.ஜி மகேந்திரன், ஒரே ஒரு மக்கள் திலகம், ஒரே ஒரு நடிகர் திலகம், ஒரே ஒரு மெல்லிசை மன்னர், ஒரே ஒரு கவிஞர் கண்ணதாசன் ஒரே ஒரு ரஜினிகாந்த்தான் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும் என்று ரஜினிக்கு புகழாரம் சூட்டினார்.