நடிகர் ரஜினிகாந்த் PT Web
சினிமா

யானையல்ல.. குதிரை! மீண்டும் மீண்டும் நிரூபித்த சூப்பர் ஸ்டார்.. ரஜினியின் வியத்தகு திரைப்பயணம்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன் 74ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நேரத்தில் அவரின் திரைப்பயணத்தை விவரிக்கிறது, இத்தொகுப்பு..

கே.கே.மகேஷ்

போக்கிரி ராஜா!

பார்வையாலேயே நெருப்பைப் பற்றவைக்கும், கைவிரலில் இருந்தே துப்பாக்கித் தோட்டாக்களைச் சீறவைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி, சிவாஜி கெய்க்வாட்டாகப் பிறந்தது பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான அனுமந்த் நகரில்! தந்தை ராமோஜி ராவ் பிறந்தது தமிழகத்தின் கிருஷ்ணகிரி அருகிலிருக்கும் நாச்சிக்குப்பத்தில். தாயில்லாப் பிள்ளையான ரஜினி, போலீஸ்கார தந்தையின் அதீத கண்டிப்பிலும், இரு அண்ணன்களின் பராமரிப்பிலுமே வளர்ந்தார்!

ரஜினி

“படா… பேஜாரா போச்சுப்பா” - படிப்பைப் பற்றிப் பேசினாலே இப்படித்தான் இருந்தது சிவாஜிராவ் கெய்க்வாட்டுக்கு. வெளியில் செய்யும் போக்கிரித்தனம் போதாது என்று, சொந்த வீட்டிலேயே சில்லரைகளைத் திருடும் பழக்கம் வேறு இருந்தது. அப்புறமென்ன எல்லோரும் எதிர்பார்த்தபடியே, மூட்டை தூக்கத்தான் போனார். அப்போது அவர் கற்றுக்கொண்ட முதல் தமிழ் வார்த்தை ‘தூக்கு’. பின்னாளில் முன்வரிசையிலிருந்த பல திரை ஆளுமைகளைத் தட்டித்தூக்கி மின்னலாய் முன்னேறியதற்கு, வீட்டில் செய்த சேட்டைகள் எதையும் பட அதிபர்களிடம் காட்டாமல், நேர்மையாய், கடுமையாய் உழைத்ததே காரணம். 

நண்பன் போட்ட சோறு!

ராஜ்குமார், சிவாஜி கணேசன் உள்ளிட்டோரின் படங்களைப் பார்த்து, நடிகராக ஆசைப்பட்ட ரஜினி, தன் கலை ஆர்வத்தை தெருக்கூத்திலும், சில நாடகங்களிலும் வெளிப்படுத்தினார். `கையில் கண்டக்டர் பணி, கனவிலோ நடிகராகும் ஆசை’ என இரண்டு கரைக்கும் இடையில் தத்தளித்துகொண்டிருந்த சிவாஜி ராவுக்கு, தைரியம் கொடுத்து, ``இந்தா தங்கச் சங்கிலி... மெட்ராஸுக்கு சினிமா வாய்ப்பு தேடிப் போ!” என வழியனுப்பிவைத்தவர் நண்பரும் டிரைவருமான ராஜ் பகதூர். பெரும் நம்பிக்கையோடு சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்த சிவாஜி ராவுக்கு, 1975-இல் `அபூர்வ ராகங்கள்’ படத்தில் வாய்ப்பு கொடுத்ததோடு, ரஜினிகாந்த் என்று பெயரும் சூட்டினார் இயக்குநர் கே.பாலச்சந்தர்.

அபூர்வராகங்களில் ரஜினிக்கு ரொம்பச் சின்ன கேரக்டர்… அதுவும் நெகடிவ் ரோல். ஆனாலும், சிறிய காந்தக் கண்கள், கலைந்த கேசத்தோடு கேட்டை ஸ்டைலாகத் திறந்துகொண்டு நுழையும் ரஜினியைப் பார்த்த மாத்திரத்தில், “யப்பா… யார்யா இவன்?!” என்று புல்லரித்ததோடு, இந்தாளுகிட்ட என்னம்மோ ஒண்ணு இருக்குய்யா என்று புகழ்ந்தார்கள் ரசிகர்கள். ‘கவர்ச்சி வில்லன் ரஜினி ரசிகர் மன்றம்’ என்று மதுரையில் மன்றமும் தொடங்கிவிட்டார்கள்!

பாயும் புலி!

கே.பாலச்சந்தர் கண்டெடுத்த கருப்பு வைரத்தை பட்டை தீட்டியவர் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். நெகடிவ் ரோல்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த ரஜினியை கதாநாயகனாக்கியது. அவரைவைத்து அதிக படம் இயக்கியதும் முத்துராமனே. நடிகராகி மூன்றாண்டாகியும் `16 வயதினிலே’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் வெறும் 2,500 தான். அதே படத்தில் கமலுக்கு சம்பளம் 30,000, ஸ்ரீதேவிக்கு 9,000. அடுத்த இரண்டே வருடத்தில் 40க்கும் அதிகமான படங்களில் நடித்தார்.

மொய்க்கும் தயாரிப்பாளர்களிடமிருந்து தப்பிக்க சம்பளத்தை உயர்த்திக்கொண்டே போன ரஜினி, ஒரு கட்டத்தில் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகரானார். இதெப்படி இருக்கு?!

என் வழி தனி வழி!

நடிகர்களுக்கென்று அப்போதிருந்த எந்த அழகு வரையறைகளுக்குள்ளும் அடங்காதவர் ரஜினி. அவரது உடல்மொழியும் தனித்துவமிக்கது… எல்லோரையும் வசீகரிக்கக்கூடியது. அவர் நடை, உடை, பாவனை மட்டுமின்றி பேசும் வசனமும்கூட தனி ஸ்டைல்தான்.

“முதல் போட்ட முதலாளிக்கு லாபம் சம்பாதிச்சுக் கொடுக்கணும்… காசு கொடுத்து டிக்கெட் வாங்குன ரசிகனை சந்தோஷப்படுத்தணும்!” - இதுதான் ரஜினியின் சக்ஸஸ் மந்திரம்! 74 வயதிலும் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக திகழ்வதற்கும், எப்போதும் ஐந்தாறு தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் தொகையுடன் வரிசையில் நிற்பதற்கும்கூட அதுவே காரணம்!

காதல்… காமெடி… ஜுஜுபி!

“எங்கள் ஸ்டைல் மன்னன், நடிப்பில் காதல் மன்னனையே மிஞ்சிட்டாருப்பா!” என்று ரசிகர்களைக் கொண்டாட வைத்த படம் மகேந்திரனின் ’ஜானி’. அதில் ஸ்ரீதேவியிடம் தலைவர் காதலைச் சொல்லும் காட்சியைப் பார்க்கிறவர்கள், ரஜினியைக் காதலிக்கத் தொடங்கிவிடுவார்கள். ’புதுக் கவிதை’, ‘நல்லவனுக்கு நல்லவன்’ தொடங்கி, சமீபத்தில்வந்த ‘கபாலி’, ‘காலா’ வரை தன் காதல் முகத்தை அழகாக வெளிப்படுத்தினார் ரஜினி!  

காமெடியிலும் ரஜினியை யாரும் அடிச்சுக்க முடியாது… அவரது அசாத்தியமான நகைச்சுவை நடிப்புக்கு தில்லுமுல்லு தொடங்கி ஜெயிலர் வரையில் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம்!

பான் இந்தியா சூப்பர் ஸ்டார்!

பான் இந்தியா கலாச்சாரம் உருவாகும் முன்பே, பான் இந்தியா சூப்பர் ஸ்டாரானவர் ரஜினி. இமயமலை அடிவாரத்துக்கே போய், “சூப்பர் ஸ்டாரு யாரு?”ன்னு கேட்டா சின்னப்பிள்ளையும் சொல்லும்! அதற்கு அவரது ஸ்டைல் மட்டுமல்ல, பன்மொழித்திறனுக்கும் பங்குண்டு.

இந்தி உள்பட எந்த மொழியில் நடித்தாலும் தன் சொந்தக் குரலில் வசனம் பேசும் ரஜினிக்கு 16 வயதினிலே படத்தில் நடித்தில் நடித்தபோது தமிழ் வாசிக்கக்கூடத் தெரியாது. “தமிழை மட்டும் ஒழுங்காப் பேசக் கற்றுக் கொள்... உன்னை எங்கே கொண்டுபோய் வைக்கிறேன் பார்!” - இது சிவாஜி ராவை முதன் முதலில் பார்த்தபோது பாலச்சந்தர் சொன்னது.

ஒரே ஒருமுறை மதுபோதையுடன் சூட்டிங்குக்கு வந்தவரை, “நாகேஷ் கதை தெரியுமாடா உனக்கு!” என்று எச்சரித்துத் திருத்தியதும் அந்த குருநாதர்தான். கண்ணதாசனுடன் கோப்பையைப் பகிர்ந்துகொண்ட ஒரு நொடியில், வாசிப்பின் ருசியை அறிந்தார் ரஜினி. பிறகு தினத்தந்தியில் ஆரம்பித்து, பொன்னியின் செல்வனையே ஒரே நாளில் முடிக்கும் அளவுக்கு வாசித்துத்தள்ளினார்!

யானையல்ல… குதிரை!

சுரேஷ் கிருஷ்ணாவுடன் இணைந்து ‘பாட்ஷா’ எனும் மெகாஹிட் ஆக்‌ஷன் படத்தைக் கொடுத்த ரஜினி, தன் ஆன்மீக நம்பிக்கைக்காக 2002-இல் ‘பாபா’ எனும் விஷப்பரீட்சையிலும் இறங்கினார். ‘பாபா’ பெருந்தோல்வியைச் சந்தித்தும், பணம் போட்ட விநியோகஸ்தர்கள் அதைத் திரும்பக் கேட்டு படையெடுத்ததும் இனி ரஜினி அவ்வளவுதான் என்று பேசவைத்தன. மூன்றாண்டுகள் கழித்து வெளியான ‘சந்திரமுகி’, தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் ரீதியாக புதிய சாதனை படைத்தது. தன்மீதான விமர்சனத்துக்கு அப்போது பதில் சொன்னார் ரஜினி இப்படி: “நான் யானையல்ல குதிரை… விழுந்தாலும் டக்கென எழுந்து ஓடுவேன்.”

எளிமையின் பிரமாண்டம் ரஜினி!

‘வளராத எதுவும் தேய்ந்துபோகும்’ என்பதை நன்குணர்ந்த ரஜினி தொடர்ந்து தன்னை அப்டேட் செய்துகொண்டேயிருந்தார். கோச்சடையான், லிங்கா படங்களின் தோல்விகளுக்குப் பிறகு தன்னை சுயபரிசோதனை செய்துகொண்ட ரஜினி, இனி தன் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்க முடிவுசெய்தார். நரைத்த முடியுடன் ‘கபாலி’யாக திரையில் தோன்றினார். அடுத்தடுத்து சுப்புராஜ், நெல்சன், லோகேஷ் கனகராஜ் என இளம் தலைமுறை இயக்குநர்களுடன் இணைந்து தற்போதைய ரசனைக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்திவருகிறார்.

கேமராவுக்கு முன் விதவிதமான கோர்ட் சூட்டுகள், கலர் கண்ணாடிகள் என தூள்கிளப்பும் ரஜினி, பொதுநிகழ்ச்சிகளில் ஒப்பனையற்ற முகம், விக் இல்லா தலை, எளிமையான உடை என சாமானிய தோற்றத்தில் காட்சியளிப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

சின்னத்திரை தொடங்கி வெள்ளித்திரை வரை வளர்ந்து வரும் நடிகர்கள், இயக்குநர்களின் செல்போன் எண்களைத் தேடிப்பிடித்து பேசுவதும், வீட்டுக்கு அழைத்துப் பாராட்டுவதும் ரஜினிக்கே உரிய குணம். எத்தனை உயரம் சென்றாலும் ஆணவமும், தலைகனமும் ஏறிவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கிறார் எல்லோருக்கும் நண்பனான ரஜினி!

அதிசய பிறவி!

2011 ஏப்ரல் 29. ரசிகர்களைத் துடிதுடிக்க வைத்துவிட்டார் ரஜினி. வாந்தி, வயிற்று வலியுடன் மருத்துவமனையில் அட்மிட்டான ரஜினிக்கு முதலில் சாதாரண அஜீரணக்கோளாறு என்றுதான் சொன்னார்கள். பிறகு மூச்சுக்குழாய் தொற்று, நுரையீரலில் நீர்க்கோர்ப்பு, குடல்நோய், சிறுநீரகக் கோளாறு என்று கொஞ்சம் கொஞ்சமாக முழு மருத்துவ அறிக்கையும் வெளியானது. மே 27-ல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார் ரஜினி.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு, எம்.ஜி.ஆரைப் போலவே செத்துப் பிழைத்தார் ரஜினி. ஜூலை 11-ம் தேதி சென்னை விமான நிலையத்தில், வெள்ளைச்சட்டை, ப்ளூ ஜீன்ஸுடன் ஸ்டைலாகத் திரும்பியது அந்த அதிசய பிறவி! அதன் பிறகும் ஒரு டஜன் படங்களில் நடித்து, 74 வயதிலும் வெள்ளித்திரையின் உச்சத்தில் கழுகாக வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது ரஜினி எனும் ராஜாளி!