சினிமா

பேரறிவாளனை விடுதலை செய்ய நடிகர்கள் பார்த்திபன், பிரகாஷ் ராஜ் கோரிக்கை

Sinekadhara

பேரறிவாளனை விடுதலை செய்ய தானும் ஆதரவுக்கரம் நீட்டுவதாக நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை தமிழக அரசே விடுதலை செய்துகொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை ஆளுநர் விடுதலை செய்யாமல் இருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக அமைதி காத்துவரும் ஆளுநருக்கு 161 சட்டப்பிரிவை பயன்படுத்தி தமிழகக் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை வைத்தும் ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி தமிழ் சினிமாத்துறையைச் சேர்ந்த பலர் ஒன்றுசேர்ந்து, '161 ரிலீஸ் பேரறிவாளன்’ பெயரில் பாடலை தயாரித்து நவ.19ஆம் தேதி வெளியிட்டுள்ளனர்.

தற்போது நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ராப் பாடலின் போஸ்டருடன், பேரறிவாளனை விடுதலை செய்ய தானும் ஆதரவுக் கரம் நீட்டுவதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ''அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும், துயரமும் அளவிட முடியாதது.விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால்,அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் பிரகாஷ் ராஜும் தனது ட்விட்டர் பக்கத்தில் காவல் அதிகாரியின் வீடியோ ஒன்றை பதிவிட்டு,''தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்குமூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக  நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்பவேண்டியிருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார் .