சினிமா

தமிழ் உட்பட 5 மொழிகளில் ஓடிடியில் வெளியாகும் புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’

sharpana

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசித் திரைப்படமான ‘ஜேம்ஸ்’ ஓடிடியில் வெளியாகிறது.

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் உயிருடன் இருக்கும்போது ‘ஜேம்ஸ்’ படத்தில் நடித்து முடித்திருந்தார். அப்படத்தின் வெளியீட்டுப் பணிகளின்போதே உடற்பயிற்சி செய்யும்போது கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால், ‘ஜேம்ஸ்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடையாமல் இருந்தன. புனித் ராஜ்குமாருக்கு, அவரது அண்ணன் சிவ ராஜ்குமார் பின்னணி குரல் கொடுத்துள்ளார். வெளியீட்டுப் பணிகள் அனைத்தும் முடிந்ததால் ‘ஜேம்ஸ்’ கடந்த மார்ச் 17-ஆம் தேதி புனித் பிறந்தநாளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சேத்தன் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் புனித் சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். நாயகியாக பிரியா ஆனந்த். இவர்களுடன் சரத்குமார், ஆதித்யா மேனன் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். மேலும், புனித்தின் அண்ணன்கள் சிவ ராஜ்குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ்குமார் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

’ஜேம்ஸ்’ எப்படியிருந்தாலும் ’அப்புவை திரையில் பார்த்தாலே போதும்’ என்று தியேட்டர்களுக்கு தங்கள் குடும்பத்தினரையும் அள்ளிக்கொண்டுச் சென்றனர் புனித் ரசிகர்கள். அதன் வெளிப்பாடாக, ‘கேஜிஎஃப்’ படத்திற்குப் பிறகு ரூ.100 கோடி வசூல் சாதனை செய்த இரண்டாவது கன்னடப்படம் என்றப் பெருமையுடன் ஜெயித்திருக்கிறது ‘ஜேம்ஸ்’. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை சோனி லைவ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ‘ஜேம்ஸ்’ சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனை, சோனி லைவ் அதிகாரபூர்வமாகவும் தனது ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் வரிசையில் வைத்திருக்கிறது.