pradeep ram singh rawat pradeep ram insta
சினிமா

‘கஜினி’ வில்லன் இனி இல்லை.. காலமானார் நடிகர் பிரதீப் ராவத்.. திரையுலகினர் இரங்கல்!

பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகில் வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகர் பிரதீப் ராவத் காலமானார்.

PT WEB

பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகில் வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென oor இடத்தைப் பிடித்த நடிகர் பிரதீப் ராவத் காலமானார். அவருக்கு வயது 74. புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த நிலையில், மீண்டும் பாதிப்பு தீவிரமடைந்ததில் சிகிச்சையில் இருந்தபோது நேற்று உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 1952-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் பிறந்த பிரதீப் ராவத், பி.ஆர்.சோப்ராவின் புகழ்பெற்ற 'மகாபாரதம்' தொலைக்காட்சி தொடரில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கினார். பின்னர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் வலுவான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தார்.

பாலிவுட்டில் 'லகான்', 'சர்ஃபரோஷ்' உள்ளிட்ட படங்களில் கவனம் ஈர்த்த பிரதீப் ராவத், தமிழ் சினிமாவில் சிலம்பரசன் நடித்த 'தொட்டி ஜெயா' திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'கஜினி' திரைப்படத்தில் 'கஜினி தர்மாத்மா' என்ற கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது, தமிழ் ரசிகர்களிடையே அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கியது. பின்னர் அஜித் நடித்த 'வீரம்', விஜய் நடித்த 'ஜில்லா' உள்ளிட்ட படங்களிலும் வில்லனாக நடித்தார். 'தொட்டி ஜெயா', 'வாத்தியார்', 'பலே பாண்டியா', 'ஆம்பள', 'சிவலிங்கா', 'ஆயிரத்தில் இருவர்', 'குலு குலு', 'டி டி ரிட்டர்ன்ஸ்' போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

PRADEEP RAWAT

நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பிரதீப் ராவத், தனது மிரட்டலான திரைமுகம், கம்பீரமான குரல், வலுவான நடிப்பு ஆகியவற்றால் திரையுலகில் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கியவர். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர் - ராஜ்குமார். ர