சினிமா

நடிகர் சங்கப் பதவியில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா

rajakannan

தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்க தலைவர் நாசரிடம் பொன்வண்ணன் கொடுத்துள்ளார். ஆனால் பொன்வண்ணனின் ராஜினாமா கடிதம் இதுவரை ஏற்கப்படவில்லை. ராஜினாமா முடிவு குறித்து அவரிடம் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விஷால் பொன்வண்ணனிடம் நேரில் பேசியுள்ளார். ராஜினாமா விஷயத்தில் உறுதியாக இருப்பதாக பொன்வண்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ராஜினாமா முடிவு குறித்து பொன்வண்னன் கூறுகையில், “நடிகர் விஷாலின் அரசியல் செயல்பாடு குறித்து பலரும் கேள்விகள் கேட்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றபோது எந்த கட்சியையும் சாராத நிர்வாகம் அமைய வேண்டும் என விரும்பினோம். ஆனால் தற்போது எல்லா கட்சிகளை சேர்ந்தவர்களும் சங்கத்தில் உள்ளனர். அரசியல் சார்பற்று செயல்பட வேண்டும் என எடுத்த முடிவின் படி விஷால் செயல்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட விண்ணப்பித்தது எங்களது கொள்கைக்கு முரண்பாடான செயல்” என்றார்.

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைவராகவும், பொன்வண்ணன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விஷால் பொதுச் செயலாளர் பதவிக்கும், கார்த்தி பொருளாளர் பதவிக்கும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.