கொரோனா சிகிச்சை கூடமாகப் பயன்படுத்திக் கொள்ள எனது இருவீட்டை வழங்குகிறேன் என்று நடிகர் பார்த்திபன் வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.
மேலும் இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் பக்கத்தில் சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அந்தப் பதிவில், இதுவரை கொரோனா பாதிப்புக்காகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,09,163 ஆக உள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 15,298 ஆக இருப்பதாகவும் கூறியுள்ள அவர், மொத்தம் 9154 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளதாகவும் அதில் தற்போது 116 பேர் புதியதாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுவரை கொரோனா நோய்க்கான மாதிரிகளை எடுத்துச் சோதிக்கப்பட்ட 743 பேர்களில் மொத்தம் 608 பேருக்கு நோய்க்கான தாக்கம் இல்லை என்பதும் அதில் 15 பேருக்கு மட்டுமே பாசிடிவ் என மருத்துவ அறிக்கை வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அதில் இன்னும் 120 பேருக்கான சோதனை நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் செயல்பாட்டைப் பாராட்டி நடிகர் பார்த்திபன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர், “எந்த நோய் வந்தாலும் அதற்கு மருந்து கொடுத்துச் சரி செய்துவிடலாம் என்பதை மீறி, கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றிய நம் கவலை என்னவென்றால் அதற்கு சிகிச்சை அளிக்கக் கூடிய போதிய மருத்துவர்கள் நம்மிடம் இல்லை என்பதுதான். அதே போல போதிய இடவசதி, போதிய மருத்துவமனைகள் இல்லை என்பதுதான். அது தான் இருப்பதிலேயே பெரிய துயரமாக இருக்கிறது. இத்தாலி போன்ற வசதியான நாட்டிலேயே அதைச் செய்ய முடியவில்லை எனும் போது, இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாட்டில் அதைச் செய்வது என்பது மிகமிக கடினமானது” எனத் தெரிவித்துள்ள நடிகர் பார்த்திபன் இது குறித்துத் தான் 24 மணிநேரமும் யோசித்துக் கொண்டே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேற்கொண்டு தனக்குத் தோன்றிய சில யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளாவதாகச் சொன்ன பார்த்திபன், “போதிய மருத்துவமனைகள் இல்லாத நிலையில் சில அவசரகால மருத்துவமனைகளை உருவாக்குவதற்காக நம்மால் சின்ன இடங்களை உருவாக்க முடியும். தெருமுனைகளில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களில், அரசு கட்டடங்களில் நாம் சில சோதனை மருத்துவக் கூடங்களை உருவாக்கலாம். அதற்கு உதவியாக எனக்கு கேகே நகரில் சொந்தமாக உள்ள இரண்டு வீட்டை வழங்கத் தயாராக இருக்கிறேன். அந்த வீட்டை அசரகால மருத்துவக் கூடமாக நிலைமை சரியாகும் வரை பயன்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும். என்னைப் போலவே பலரும் இரண்டு வீடுகள் வைத்திருப்பார்கள். அவர்களும் இதைப்போலக் கொடுத்து உதவினால் நிலைமையைச் சரியாக கையாள உதவியாக இருக்கும். இது யோசனைதான். தேவை என்றால் செயல்படுத்தலாம்” எனக் கூறியுள்ளார்.