சினிமா

தனுஷ்கோடியில் தொடங்கிய இயக்குநர் ராம் - நிவின் பாலி படத்தின் படப்பிடிப்பு

தனுஷ்கோடியில் தொடங்கிய இயக்குநர் ராம் - நிவின் பாலி படத்தின் படப்பிடிப்பு

sharpana

இயக்குநர் ராம் - நிவின் பாலி இணையும் படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் தொடங்கியது.

ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ‘பேரன்பு’ வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. இந்தப் படத்துக்குப் பின் நடிப்பில் கவனம் செலுத்திய ராம், மிஷ்கின் இயக்கிய 'சைக்கோ' படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், ராம் - நிவின் பாலி இணையும் புதிய படம் குறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இப்படத்தை சிம்புவின் ’மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி தயாரிக்கிறார். நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிக்கும் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் துவங்கியுள்ளது.

நடிகர் நிவின் பாலி, அஞ்சலி, ராம், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலரும் பங்குப்பெற்ற புகைப்படங்களைப் தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “நண்பர்களுக்கு வணக்கம். ‘மாநாடு’ திரைப்படத்தைத் தொடர்ந்து, மக்களின் இயக்குநர் ராம் இயக்கத்தில் மலையாளம், தமிழ் இரண்டிலும் இளையோர்களின் மனதைக் கொள்ளையடித்த நிவின் பாலி ஹீரோவாக நடிக்க, அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் உங்கள் அன்பினாலும் ஆசிகளாலும் தொடங்கியுள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.

ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ படங்களைத் தொடந்து ஐந்தாவது முறையாக இப்படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.