இந்தி மற்றும் மராத்தி சினிமாவைக் கட்டியாணட மூத்த நடிகர் நானா படேகர், கோவாவில் உள்ள தனது இல்லத்தில் ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மூத்த நடிகர் நானா படேகர் (75), கோவாவில் உள்ள தனது இல்லத்தில் ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் இன்று அதிகாலை 5:20 மணியளவில்காலமானார். அவரது மகன் மல்ஹர் படேகர், இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். கோவாவின் டோனா பவுலாவில் உள்ள அவரது இல்லத்தில் சுயநினைவின்றி காணப்பட்ட அவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் அங்குச் செல்வதற்கு முன்பே மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1951ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்த நானா படேகர், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தி மற்றும் மராத்தி சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்ந்தவர். 1978-இல் முசாஃபர் அலியின் 'கமன்' என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், சிறிய வேடங்களில் கூட முத்திரை பதிக்கக்கூடிய ஒரு நடிகராகத் தன்னை படிப்படியாக நிலைநிறுத்திக் கொண்டார். 1980-களில், நானா 'ஆஜ் கி ஆவாஸ்', 'அங்குஷ்', 'பிரதிகாத்', 'அந்த யுத்', 'மோரே' மற்றும் 'சலாம் பாம்பே' போன்ற படங்களில் நடித்தார். 'சலாம் பாம்பே' படம் அவருக்குப் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இருப்பினும், 'பரிந்தா' படமே அவரது திரை வாழ்க்கையில் ஒரு முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது. இப்படத்தின் மூலம் பல்வேறு விருதுகளையும் பெற்றார். நடிப்பைத் தவிர, எழுத்து மற்றும் இயக்கத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். 'பிரஹார்: தி ஃபைனல் அட்டாக்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், அதில் ஒரு ராணுவ அதிகாரியாகவும் நடித்திருந்தார். அவர், கடைசியாக 'சுபேதார்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பிலிம்பேர் விருதுகளுடன், சினிமா மற்றும் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, 2013-இல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.