சினிமா

லிங்குசாமி வரிசையில் இணைந்த வெங்கட் பிரபு - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

சங்கீதா

இயக்குநர் வெங்கட் பிரபு, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகசைதன்யாவின் புதிய படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்து வருபவ்ர். இவரின், ‘சென்னை 28’, ‘கோவா’, ‘மங்கத்தா’, ‘மாநாடு’ உள்ளிட்டப் படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மன்மதலீலை’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், வெங்கட் பிரபு, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளது. தற்காலிகமாக ‘என்சி22’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய படம் மூலம் முதன்முறையாக நாகசைதன்யா தமிழில் அறிமுகமாகிறார்.

இதேபோல் இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம் இந்தப் படமாகும். இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிக்கிறார். படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி நடிப்பில், இயக்குநர் லிங்குசாமி ‘தி வாரியர்’ என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் முதன்முறையாக இயக்கிவருகிறார். ஜூலை மாதம் வெளியாகவுள்ள இந்தப் படத்தையும், ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரித்து வருகிறார். தற்போது அவருக்கு அடுத்து வெங்கட் பிரபு இந்த வரிசையில் இணைந்துள்ளார்.

அஜித்தின் ‘ஜி’ படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்கியபோது, அவரிடம் துணை இயக்குநராக வெங்கட் பிரபு பணிபுரிந்து வந்தார். மேலும், ‘அஞ்சான்’ படத்தை ரசிகர்கள் கிண்டல் செய்தபோது, லிங்குசாமிக்கு ஆதரவாக இயக்குநர் வெங்கட் பிரபுதான் முதன்முதலாக குரல்கொடுத்தார்.

மேலும் இயக்குநர் ராஜா, சிரஞ்சீவி வைத்து ‘காட்ஃபாதர்’ படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் விஜய் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.