சினிமா

மோகன்லாலின் ‘மரைக்காயர் - அரபிக்கடலின் சிங்கம்’ படத்தை தமிழில் வெளியிடும் கலைப்புலி தாணு

sharpana

மூன்று தேசிய விருதுகளைக் குவித்த மோகன்லாலின் ’மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி தாணு  தமிழகத்தில் வெளியிடுகிறார்.

தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ‘கர்ணன்’ வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக சூர்யா- வெற்றிமாறனின் ’வாடிவாசல்’ படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்குப்பிறகு, விஜய்-லோகேஷ் கனகராஜ் ‘விஜய் 67’ படத்தையும் தாணுதான் தயாரிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மலையாள நடிகர் மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிகடலிண்டே சிம்ஹம்’ படத்தை தமிழில் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படமாக ரீமேக் செய்து தமிழகம் முழுக்க வெளியிடுகிறார்.

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், தாணு “வராலாற்று சிறப்புமிக்க ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தை வி கிரியேஷன் சார்பாக தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்” என்று கூறியுள்ளார். இப்படம் உலகம் முழுக்க வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தை முன்னணி இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன்,சுஹாசினி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.

இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இப்படம் கொரோனா சூழலால் ஓராண்டுகளுக்கும் மேலாக வெளியாகாமல் இருந்து வந்தது. கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி முதல் கேரளாவில் தியேட்டர்கள் திறக்க அனுமதித்துள்ளதால், அடுத்தமாதம் வெளியாகிறது.