சினிமா

கமல்ஹாசன் இப்படி பண்ணலாமா ’பாஸ்’: மன்சூர் காட்டம்

கமல்ஹாசன் இப்படி பண்ணலாமா ’பாஸ்’: மன்சூர் காட்டம்

webteam

ஏபிகே பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ’உறுதி கொள்’. ’கோலிசோடா’ படத்தில் நடித்த கிஷோர் ஹீரோவாக நடிக்கிறார். மேகனா, காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.அய்யனார் இயக்கியுள்ளார். ஜூட் வினிகர் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.
 
விழாவில் பேசிய மன்சூர் அலிகான், ’தியேட்டரில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு. அதுதான் சினிமாவை வாழ வைக்கும். சினிமாவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. சினிமாக்காரர்கள் தான் சினிமாவை அழிக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கு பெறுகிறார். அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டம் மாதிரி கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்களுக்கு அந்த டி.வி. காரங்க ஏதோ படி அளக்கிறாங்க. அவங்க கஷ்டம் தீரட்டும், பரவாயில்லை. ஆனால் கமல் மாதிரி சாதனை கலைஞர், இது மாதிரி நிகழ்ச்சி மூலம் சினிமாவை அழிக்க காரணமாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் மாலை காட்சி, இரவு காட்சிக்கு தியேட்டருக்கு வருகிற கூட்டம் கட். அதே நிகழ்ச்சி மறுநாள் காலை ஒளிபரப்பாகிறது. அதனால் காலை காட்சிகளும் கட். ஆக எல்லா காட்சிகளுமே அவுட்.
நாளை கமல் படம் வெளிவரும் போது அஜீத்தோ, விஜய்யோ இது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்தி, அதனால் அவரது படத்தின் வசூல் பாதித்தால் என்னாகும் என்பதை அவர் யோசிக்க வேண்டும்’ என்று பரபரப்பாக்கினார் மேடையை.

முன்னதாக பேசிய நடிகர் ஆரி, ‘கமல்ஹாசன் முன்பு எடுத்த முடிவை இப்போது நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். திரையரங்கில் மட்டும் படத்தை வெளியிடுவதால் ஜிஎஸ்டி மற்றும் உள்ளாட்சி வரி செலுத்த வேண்டி இருக்கும். தயாரிப்பாளர் சங்கமே ஒரு ஆப் துவங்கி அதன் மூலம் 100 ரூபாய் பெற்றுக்கொண்டு படங்களை வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக இருக்கும்’ என்றார்.
தயாரிப்பாளர்கள் அய்யப்பன், பழனி, முனீஸ்காந்த், அபி சரவணன், இசையமைப்பாளர் சத்யா உட்பட பலர் பேசினர்.