kudumbasthan movie trailer PT
சினிமா

“நல்லா சுண்டவிட்டு எறக்குனா..” கவனம்ஈர்க்கும் குடும்பஸ்தன் ட்ரெய்லர் - மணிகண்டனுக்கு அடுத்த வெற்றி?

ஹீரோவாக ’குட் நைட்’ மற்றும் ’லவ்வர்’ ஆகிய திரைப்படங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வணிகரீதியிலும் அது வெற்றிப்படமாக அமைந்ததால் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

Rajakannan K

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த முக்கியமான கலைஞர்களில் தானும் ஒருவர் என்று நிரூபித்துக் கொண்டே இருப்பவர்தான் மணிகண்டன். கதாசிரியர், இயக்குநர், வசனகர்த்தா, நடிகர் என பலமுகங்களைக் கொண்டிருக்கிறார்.

இவரது மிகிக்ரி திறமைக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கவே செய்கிறது. கமல்ஹாசனின் ஆஸ்தான ரசிகர் இவர்.

எங்கு தொடங்கியது சினிமா கேரியர்?

’பிஸ்ஸா 2 - வில்லா’ படத்தின் மூலம் கதை ஆசிரியராக அறிமுகமானார் மணிகண்டன். ’இந்தியா - பாகிஸ்தான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ’காதலும் கடந்து போகும்’ படத்தில் விஜய் சேதுபதி கூடவே பயணிக்கும் அவரது கதாபாத்திரம் அழுத்தமாகப் பதிவானது. ’8 தோட்டாக்கள்’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடொட்ஜ்ட்ஜ அவர், ’விக்ரம் வேதா’ படத்தில் வசனகர்த்தாவாகவும் நடிகராகவும் ஜொலித்தார்.

’காலா’வில் லெனின் என்ற கதாபாத்திரத்திலும் தனித்து தெரிந்தார். ’சில்லு கருப்பட்டி’, ’ஏலே’, ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ ஆகிய படங்களில் அவர் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தது. டெல்லி கணேஷ் நடிப்பில் அவர் இயக்கிய ’நரை எழுதும் சுயசரிதம்’ குறும்படம் தனிக்கவனம் பெற்றது.

திருப்புமுனையை ஏற்படுத்திய ஜெய்பீம்!

இவையெல்லாவற்றையும் தாண்டி, சினிமா கேரியரில் அவரது வாழ்வில் திருப்புமுனைய ஏற்படுத்தியது ’ஜெய்பீம்’ திரைப்படம். ராஜாகண்ணு கதாபாத்திரமாகவே வாழ்ந்துகாட்டியிருப்பார் மணிகண்டன். அவரது நடிப்புக்கு அப்படியொரு பாராட்டு மழை கிடைத்தது.

’ஜெய்பீம்’ வெற்றி எப்படி தக்க வைக்கப்போகிறார் என்று நினைத்திருக்கையில், ’குட்நைட்’ என்ற பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்தார் மணிகண்டன். நடுத்தர வர்க்க இளைஞன் கதாபாத்திரத்திற்கு அப்படியொரு பொருத்தமாக இருப்பார்.

அடுத்து, ’லவ்வர்’ படத்தில் கிட்டத்தட்ட எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதாவது அவர்தான் ஹீரோ.. ஆனால், பெண்ணின் உலகில் எல்லைமீறி தலையிடும் அன்பு என்ற பெயரில் தொல்லை மேல் தொல்லை கொடுக்கும் கதாபாத்திரம்.

’ஜெய்பீம்’, ’குட்நைட்’ படம் கொடுத்தபின் எப்படி இந்தப் படத்தின் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்தார் என்பதே ஆச்சர்யம்தான்.

’குட்நைட்’, ’லவ்வர்’ வெற்றி - குடும்பஸ்தனுக்கு எகிறும் எதிர்பார்ப்பு

ஹீரோவாக ’குட்நைட்’ மற்றும் ’லவ்வர்’ ஆகிய திரைப்படங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வணிகரீதியிலும் அது வெற்றிப்படமாக அமைந்ததால் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. தற்போது 'நித்தம் ஒரு வானம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் ’குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் மணிகண்டன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு வைசாக் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படம் தொடர்பாக ஏற்கனவே வெளியான போஸ்டர்கள், ’ஸீரோ பேலன்ஸ் ஹீரோ’, ’கண்ண கட்டிக்கிட்டு’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எப்படி இருக்கு ட்ரெய்லர்?

இத்தகைய சூழலில் இன்று ’குடும்பஸ்தன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் புதுமையான விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சமையல் குறிப்புகளைப்போல் ஒரு குடும்பஸ்தன் எப்படி உருவாக்கப்படுகிறான் என்பதை சுவாரஸ்யமாக பின்னணிக் குரலில் பெண் ஒருவர் சொல்கிறார்.

“இன்னிக்கு நாம்ம ஒரு குடும்பஸ்தன் உருவாவது எப்படிங்கிறத பார்க்கப் போறோம்..

அதுக்கு, சந்தேஷமா இருக்கிற ஒருத்தன தேர்ந்தெடுக்கலாம்..

அவனுக்கு சிறப்பா ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிக்கலாம்..

ஒரு சிட்டிகை சந்தோஷம்..

கால் ட்யூஸ்பூன் நம்பிக்கை..

தீய கொஞ்சம் கூட்டி வச்சுக்குவோம்.. சூடுபிடிக்கட்டும்..

காரம் கொஞ்சம் தூக்கலா சேர்த்துக்கலாம்..

ஏற்கனவே ஊரவச்ச பொறுப்புகள இதுல சேர்த்துக்கலாம்..

அவன பொன்நிறமா வறுத்து எடுத்துக்கலாம்..

நல்லா கிளறி விடுவோம்; கொதிக்கட்டும்..

நல்லா சுண்டவிட்டு எறக்குமா.. சுடச் சுட குடும்பஸ்தன் ரெடி..

டிரை பண்ணி பாத்துட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க” என்று கலகலப்பாக இருக்கிறது ’குடும்பஸ்தன்’ ட்ரெய்லர். நடுத்தர வர்க்க இளைஞர்களின் வாழ்க்கையை எதார்த்தமாக இப்படம் சொல்லும் என்பது ட்ரெய்லரை பார்த்தால் தெரிகிறது. எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்யும் வகையில் ட்ரெயர் அமைந்துள்ளது. படத்திற்கான புரமோஷனையும் படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.