சேவை வரி கட்டவில்லை எனக் கூறி தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் வங்கி கணக்குகளை ஹைதராபாத்தின் ஜிஎஸ்டி ஆணையரகம் முடக்கியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. தமிழில் விஜய் போன்று தெலுங்கில் மகேஷ் பாபு என்று சொல்வார்கள். விஜய் நடித்து வெற்றிப் பெற்ற கில்லி, போக்கிரி போன்ற திரைப்படங்கள் மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படங்களின் ரீ மேக்குகள்தான். சிறுவர்கள் இளைஞர்கள் என மகேஷ் பாபுவுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் மகேஷ் பாபு சேவை வரியை கட்டவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஹைதராபாத் ஜிஎஸ்டி ஆணையரகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 2007 -2008ம் ஆண்டுகளில் நடிகர் மகேஷ் பாபு சினிமா, விளம்பரம், சில நிறுவனங்களுக்கான விளம்பர தூதர் என பல தளங்களில் வருவாய் ஈட்டியுள்ளார். அதற்காக அவர் ரூ.18.5 லட்சம் சேவை வரி கட்டியிருக்க வேண்டும். ஆனால் அவர் வரியை செலுத்தவில்லை. இது தொடர்பாக அவரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை. தற்போது அவருக்கான வரித்தொகை அபராதம், வட்டி அனைத்தும் சேர்ந்து ரூ.73.5 லட்சமாக உள்ளது.
இதனையைடுத்து மகேஷ் பாபுவின் ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கணக்குகளை முடக்கியுள்ளோம். மேலும் ஆக்சிஸ் வங்கியில் இருந்து ரூ.42 லட்சத்தை பெற்றுள்ளோம். ஐசிஐசிஐ வங்கியில் இருந்து மீதித்தொகையை பெறுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.