நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத், தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தை அழைத்து சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. அதன் முடிவில், ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீகாந்திடம் நடத்திய விசாரணையில் நடிகர் கிருஷ்ணா உள்ளிட சிலர் தன்னுடன் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு சென்னை நுங்கம்பாக்கம் காவல் துறையினர் சம்மன் அனுப்பினர்.
இந்நிலையில் நேற்று வழக்கறிஞர்களுடன், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கிருஷ்ணா ஆஜரானார். அவரிடம் போதைப் பொருளை பயன்படுத்தியது குறித்தும், போதைப் பொருள் விற்பனை செய்தாரா? அல்லது போதைப்பொருள் விற்பனை செய்தவரிடம் அவர் தொடர்பில் இருந்தாரா? என்ற மூன்று கோணத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய போலீசார் நடிகை கிருஷ்ணாவை கைது செய்துள்ளனர்.
மேலும் அவரிடம் நடிகர் ஸ்ரீகாந்த் உடன் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்தும், போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் ‘நான் எந்த தவறும் செய்யவில்லை, என்னிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் போதைப்பொருளை பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் மருத்துவ அறிக்கையில் இல்லை’ எனக்கூறி நடிகர் கிருஷ்ணா மனு தாக்கல் செய்துள்ளார்.