சர்தார் 2 web
சினிமா

சர்தார் 2 படப்பிடிப்பு.. சண்டைக் காட்சியின் போது நடிகர் கார்த்தி காயம்.. படப்பிடிப்பு நிறுத்தம்!

சர்தார் 2 படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்திக்கு காயம் ஏற்பட்ட நிலையில், படப்பிடிப்பை பதியில் நிறுத்திய படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

Rishan Vengai

நடிகர் கார்த்தியின் நடிப்பில், இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் சர்தார். தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி. இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிஎஸ் மித்ரன் உருவாக்கிவருகிறார். சர்தார் 2 படத்தில் நடிகர் கார்த்தி உடன் சேர்ந்து எஸ் ஜே சூர்யா, மாளவிாக மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவரும் நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு காயம்..

சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூருவில் நடந்துவருகிறது. இதில் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது, நடிகர் கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. கார்த்திக்கு வலி குறையாததால் படப்பிடிப்பை நிறுத்திய படக்குழு, சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைசூருவில் இன்னும் 4 நாட்கள் படப்பிடிப்பு எஞ்சியுள்ள நிலையில், அதனை வேறொரு சமயம் படமாக்க திட்டமிடப்படுள்ளதாக தெரிகிறது.