சினிமா

விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு

sharpana

நடிகர் கார்த்தியின் ’விருமன்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘விருமன்’ படத்தில் நடித்துள்ளார். ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. நாயகியாக இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார்.

இப்படத்தின், படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் கடந்த 60 நாட்கள் நடைபெற்று கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. படம் குறித்து நடிகர் கார்த்தி “ என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. யதார்த்தமானவர். அவருடன் நடித்த நாள்கள் ஜாலியானவை. மீண்டும் ’விருமன்’ மூலம் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்ததில் சந்தோஷம். படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சூர்யா அவர்களுக்கும் நன்றி” என்று கூறியிருந்தார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘கஞ்சா பூ கண்ணால’ ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது.

இந்த நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுக்கக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி,  வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ‘விருமன்’ தியேட்டர்களில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த வருடம் வெளியாகும் கார்த்தியின் முதல் படம் ‘விருமன்’ என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கார்த்தி ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள்.