சினிமா

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்

sharpana

நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது.

வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளது. இதனை அதிகாரபூர்வமாக ‘விக்ரம்’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருக்கிறார்.  விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது.

இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.