சினிமா

கமல்ஹாசனின் ‘பத்தல பத்தல’: யூடியூபை மையமிடும் ரசிகர்கள்: ட்ரெண்டிங்கில் முதலிடம்

sharpana

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் ‘பத்தல பத்தல’ பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

லோகேஷ் கனகராஜின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் முக்கியமான படங்களில் ஒன்றான ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘பத்தல பத்தல’ பாடலை நேற்று இரவு வெளியிட்டது படக்குழு. ’விஸ்வரூபம் 2’ படத்திற்குப்பிறகு வெளியாகும் கமல்ஹாசன் படம் என்பதாலும் இப்பாடலை கமல்ஹாசனே எழுதியிருப்பதாலும் ரசிகர்கள் யூடியூபில் கமெண்ட்களையும் வியூஸ்களையும் கொடுத்து மையம் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக, “ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே.... சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே” வரிகளை எழுதி பாடியிருப்பதால் கமெண்ட்ஸ்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ள இப்பாடல், வெளியாகி 17 மணி நேரங்கள் ஆகிறது. அதற்குள், 10 மில்லியன் பார்வைகளை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் 1 மணி நேரத்திற்குள் 10 மில்லியனைக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.