Rating - 2.5
டில்லியை ஆளும் கேங்ஸ்டர் குழு ரங்கராய சக்திவேல் (கமல்ஹாசன்) & கோ. எதிரணி செய்த சதியினால் போலீஸ் தாக்குதல் நடக்க, சிறுவயது அமரனை (சிம்பு) கவசமாக பயன்படுத்தி தப்பிக்கிறார் கமல். தந்தையை இழந்து, தங்கையை தொலைத்து வாடும் அமரனுக்கு அரணாக நிற்கிறார் சக்திவேல். வருடங்கள் செல்ல செல்ல சக்திவேல் கும்பலுக்கு எதிராக பகையும் அதிகமாகிறது. ஒரு கொலை வழக்கில் சக்திவேல் சிறை செல்ல, கேங்கை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அமரனுக்கு வசம் வருகிறது. இது அந்தக் குழுவுக்குள் பலருக்கு புகைச்சலை ஏற்படுத்துகிறது.
சிறையிலிருந்து வெளியே வரும் சக்திவேலுக்கு, மரியாதைக்குறைவு ஏற்படுகிறதோ என்கிற அச்சம் எழுகிறது. எல்லாமே அமரன் வசம் செல்ல, புகைச்சலில் இருக்கிறார் சக்திவேல். ஒரு பக்கம் தன் குழுவுக்குள்ளேயே நிகழும் மாற்றங்கள், இன்னொரு புறம் வெளியே ஏற்படும் பகை. இதை சக்திவேல் எப்படி சமாளிக்கிறார்? யார் எதிராளி? எதற்காக இதெல்லாம் நடக்கிறது என்பதே தக் லைஃப் மீதிக்கதை.
படத்தின் பலம், கண்டிப்பாக படத்தின் நடிகர் பட்டாளம் தான். காயல்பட்டின உச்சரிப்புடன் பேசுவது, மனைவி அபிராமி, காதலி த்ரிஷா இருவரிடமும் ரொமான்ஸ், சிம்புவை சமாதானம் செய்வது எனப் பல காட்சிகளில் கமல் அசத்துகிறார். சிம்பு வழக்கம் போல மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார். கமலின் நம்பகமான ஆளாக, தன் மீது ஏற்படும் சந்தேகத்தை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளாக, தனக்கான உலகைக் கட்டமைக்கும் நபராக இடங்களில் மிளிர்கிறார். அபிராமி, த்ரிஷா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அஷோக் செல்வன் போன்றோர் நடிப்பும் கவனிக்க வைக்கிறது.
கேங்ஸ்டர் க்ரைம் டிராமாவுக்குண்டான பதைபதைப்புடன் முதல் பாதி நகர்கிறது. அபிராமி கமலிடம் கோபித்துக் கொள்ளும் காட்சியை, பின்பாதியில் கொண்டு வந்தது, த்ரிஷா தன் பெயரை சொல்லும் காட்சியை மீண்டும் கொண்டு வருவது, ஐஸ்வர்யா லக்ஷ்மி சம்பந்தப்பட்ட காட்சி என சில இடங்களில் மட்டுமே மணிரத்னம் டச் தெரிகிறது. கமலுக்கு செய்யப்பட்டிருக்கும் டி ஏஜிங் மிகச்சிறப்பு. கிட்டத்தட்ட இந்திய சினிமாவிலேயே இதுதான் பெஸ்ட். மீண்டும் மருதநாயகத்தின் மீதான நம்பிக்கை கொஞ்சம் எழுகிறது.
நடிப்புக்கு நிகரான இன்னொரு பலம் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் பாடல்கள். ஆனால் சோகம் என்னவென்றால், பழைய துணியை கிழித்து துண்டு துண்டாக்கி கரி துணியாக மாற்றுவது போல பிட்டு பிட்டாக தான் பாடல்களை படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதே சமயம் பின்னணி இசையில் பெரிய ஏமாற்றத்தை கொடுக்கிறார் ரஹ்மான்.
கேங்ஸ்டர் களம் என்பதற்கு தகுந்தவாறு படத்தின் சண்டை வடிவமைப்பை அன்பறிவு சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி, அட்டகாசம். படத்தை ஸ்டைலீஷாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன். வித்தியாசமான காஸ்டியூம் என்கிற பேரில் இரண்டாம் பாதி முழுக்க கமல் ஜமுக்காளத்துடன் வருகிறார்.
படத்தின் குறை எனப் பார்த்தால் கண்டிப்பாக இரண்டாம் பாதியை தான் சொல்லவேண்டும். முதல் பாதியில் கமல் - சிம்பு இடையில் விழும் சின்ன விரிசல் வரை எதார்த்தமாக நகரும் கதை, அதன் பின்னர் மிக அதிகப்படியான சினிமாத்தனத்துடன் நகர்கிறது. தனக்கு துரோகம் இழைத்தவர்களை கமல் பழிவாங்க வேண்டும். இதில் புதிதாக எதுவும் இல்லை என்பது பிரச்னையில்லை. ஆனால், எதுவுமே இல்லை என்பதுதான் பிரச்னை.
ஒவ்வொருவராக கமல் போட்டுத்தள்ளுவது எல்லாம் ஓக்கே தான். அபூர்வ சகோதரர்கள் காலம் தொட்டு கமல் செய்வது தான். ஆனால், அதில் ஏதாவது சுவாரஸ்யம் இருக்க வேண்டும். ஒவ்வொருவரையும் கொல்வதற்கு முன், கீதாச்சார உபதேசம் போல் கமல் பேசிக்கொண்டே இருக்கிறார். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம் ~ கமல் இருவரும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் வெள்ளை பேப்பருடன் ஷூட்டிங் சென்றார்களோ என்கிற எண்ணம் எழாமல் இல்லை.
நாயகனை விட பெட்டரான சினிமா என கமல் தக் லைப் படத்தின் ப்ரோமோஷன்களில் பலமுறை பேசினார். அது எந்த நாயகன் என்பது கமலுக்கே வெளிச்சம். இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர் என்றால் அது மணி ரத்னம் தான். இன்றளவிலும் அவர் படங்களில் ஷாட் செலக்சன் என்பது கண்ணில் ஒத்திக்கொள்வது போல் இருக்கும். ஆனால், எல்லா கதாபாத்திரங்களையும் தூய தமிழில் பேச வைப்பேன் என போராடுவது ஏன் என தெரியவில்லை. த்ரிஷாவோ அழுக்குப் பிண்டம் என்கிறார்; கமலோ காணி நிலம் என்கிறார். கதாபாத்திரங்களை சகஜமாகத்தான் பேச விடுங்களேன்.
இரண்டாம் பாதியை கமலும் மணிரத்னமும் அவர்களின் ஸ்டாண்டர்டுக்கு உருவாக்கியிருந்தால் நிச்சயம் இந்த தக்கின் லைப் தூள் கிளப்பி இருக்கும்.