தக் லைஃப்  fb
சினிமா

’மன்னிப்பு கேட்காவிட்டால்... தக் லைஃப் படத்தை திரையிட மாட்டோம்’ - எச்சரிக்கை விடுத்த கன்னட அமைச்சர்!

கன்னடம் குறித்து பேசியதற்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படத்தை திரையிட விடமாட்டோம் என கன்னட அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிடில் 'தக் லைஃப்' படத்துக்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

மணிரத்னம் இயக்கி கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பிரம்மாண்டமான திரைப்படம் THUG LIFE . பல்வேறு மொழிகளில் ஜூன் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகள் பல மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்தவகையில், சென்னையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் பங்கேற்றிருந்தார். அவரை குறிப்பிட்டு பேசும் போது, “உயிரே உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி கன்னடம். தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்" என்று பேசினார் கமல்ஹாசன்.

கர்நாடக அமைப்பினர் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கன்னட மொழிக்கு தனி வரலாறு இருக்கிறது. தமிழ் மொழியில் இருந்து பிறக்கவில்லை; கமல் பேச்சு தவறானது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கெல்லாம் பதிலளித்த கமல்ஹாசன், அவர்கள் நான் சொன்னதை குழப்பிக் கொண்டார்கள். மிகுந்த அன்போடு, வரலாற்று ஆய்வாளர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த வரலாற்றையே நான் சொன்னேன் .” என்றார்

கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி

இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கன்னட கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி , ”கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரியில்லை , அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் . மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என திரைப்பட வர்த்தக சபை கடிதம் எழுதுவோம்.” என்று குறிப்பிட்டார்.