சக்திமான் தொடர் மூலம் பிரலமான முகேஷ் கண்ணாவின் யூட்யூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார் நடிகர் கோவிந்தா. அதில் ஜேம்ஸ் கேமரூன், தன்னை ‘அவதார்’ படத்தில் நடிக்க கேட்டதாக கூறியிருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டிவி நிகழ்ச்சியிலும் இது பற்றி கோவிந்தா பேசியிருந்தார். தற்போது முகேஷ் கண்ணாவின் பேட்டியில் கோவிந்தா “அமெரிக்காவில் ஒரு தொழிலதிபரை சந்தித்த போது, அவர் ஜேம்ஸ் கேமரூனை சந்திக்க அழைத்துச் சென்றார். இருவரும் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய பின், படத்திற்கு ‘அவதார்’ எனப் பெயரிடலாம் எனப் பரிந்துரைத்தேன்.
இதில் நடிப்பதற்காக எனக்கு 18 கோடி சம்பளம் அளிப்பதாக கூறினார். ஆனால் படத்தில் ஹீரோ கதாப்பாத்திரம் ஒரு மாற்றுத்திறனாளி எனத் தெரிந்த பின், அதில் நடிக்க மாட்டேன் எனக் கூறினேன். “410 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும், உடலில் பெயிண்ட் அடித்துக் கொள்ள வேண்டும் போன்ற விஷயங்கள் தேவை என சொன்னதும் எனக்கு ஏற்புடையதாக இல்லை” என்று கூறியிருக்கிறார் கோவிந்தா. உடலில் பெயின்ட் அடித்தால், ஆரோக்கியம் பாதிக்கும், நம்முடைய உடல் தான் நமது கருவி எனக் கூறி அவதார் வாய்ப்பை மறுத்ததாக கூறியிருக்கிறார் கோவிந்தா.
இதே விஷயத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தா கூறிய போது, அதற்கு பதிலளிக்கும் விதமாக சென்ற ஆண்டு தயாரிப்பாளர் பஹ்லாஜ் நிஹாலானி (Pahlaj Nihalani) இன்னொரு விஷயத்தைக் கூறினார்.
“கோவிந்தா இந்திக்கு பதிலாக ஆங்கிலம் எனக் குழப்பிக் கொள்கிறார். நான் கோவிந்தாவை வைத்து ‘அவதார்’ என்ற பெயரில் படம் இயக்கினேன். ஆனால் 40 நிமிடங்கள் மட்டுமே படம் பிடிக்கப்பட்டது. அடிக்கடி படப்பிடிப்பில் மயங்கி விழும் அளவுக்கு கோவிந்தா உடல்நிலை இருந்ததால் படம் மேற்கொண்டு தொடர முடியாமல் போனது. எனவே அவர் இந்தி அவதார் படத்தை, ஆங்கில அவதார் படம் என்று குழப்பிக் கொள்கிறாரோ எனத் தோன்றுகிறது” என்று கூறியிருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தா கூறிய விஷயத்தை, மீண்டும் முகேஷ் கண்ணா பேட்டியில் தெரிவித்ததால் மறுபடி இது தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ளன.