அஜித் படத்தோடு க்ளாஸ் கன்ஃபார்ம்.. இட்லி கடை போஸ்டரில் தனுஷ் நெத்தியடி அறிவிப்பு!
பொங்கல் பண்டிகையையொட்டி அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மற்றொரு அஜித் திரைப்படமான ’குட் பேட் அக்லி’ திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ‘மார்க் ஆண்டனி’ என்ற ஹிட் படத்தை இயக்கியதற்கு பிறகு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.
ஆனால், தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லிக்கடை திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் நித்யா மேனன், ராஜ் கிரண் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அந்தவகையில் தனுஷ் மற்றும் அஜித் இருவரும் நேரடியாக களத்தில் மோதிக்கொள்ள உள்ளனர்.
இதனிடையே, ’குட் பேட் அக்லி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே இட்லிக் கடை படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகுமா என சோஷியல் மீடியாவில் விவாதிக்கப்பட்டு வந்தது. அஜித் படத்துடன் மோதுவதை யாரும் விரும்பமாட்டார்கள், அதனால் தனுஷ் படமும் தள்ளிப்போகும் என்று கூறப்பட்டது.
அந்த வகையில்தான், தனுஷ் இன்று பொங்கல் வாழ்த்துடன் இட்லி கடை படத்தின் இரண்டு போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளார். முதல் போஸ்டரில் கன்றுக்குட்டி உடன் தனுஷ் பெரிய அரச மரத்தின் அடியில் அமர்ந்திருக்கிறார். சேவ் செய்யப்பட்ட முகத்துடன் வித்தியாசமாக இருக்கிறார் தனுஷ். மற்றொரு போஸ்டரில் விவசாய நிலத்தில் நித்யா மேனன் உடன் ஜோடியாக இருக்கிறார். இரண்டு போஸ்டர்களுமே பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. திருச்சிற்றம்பலம் போல் இதுவும் ஒரு பீல் குட் படமாக இருக்க வாய்ப்புள்ளதுபோல் என பலரும் கூறி வருகின்றனர்.
போஸ்டரில் ஏப்ரல் 10 ஆம் தேதி படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, படம் தள்ளிப்போகவில்லை திட்டமிட்டப்படி அதேநாளில் வெளியாகும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக மாஸ் ஹீரோக்களின் படங்களை விட நல்ல கண்டெண்ட் மற்றும் மேக்கிங் இருக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதற்கு முன்பாக, பிகில் படம் வந்த போது அதற்கு எதிராக கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கைதி படம் வெளியாகியிருந்தது. அப்போது பிகில் படத்தை ஓரம்கட்டி கைதி படம் செக்கப்போடு போட்டது. அதேபோல், எந்தப் படம் நல்லா இருந்தாலும் அது ரேஸில் முந்தும் என்றே கணிக்கப்படுகிறது.