மேலூர் தம்பதி தொடுத்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் நேரில் ஆஜரானார்.
நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று கூறி, மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதனை ரத்து செய்யக்கோரி தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நடிகர் தனுஷ் தரப்பிலும், அவரை மகனாக உரிமை கோரும் கதிரேசன் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த ஆவணங்களின் அடிப்படையில், அங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக தனுஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜரானார்.
பதிவாளர் அறையில் தனுஷின் அங்க அடையாளங்களை அரசு மருத்துவர் சரிபார்த்து இன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலூர் தம்பதியினர் கூறிய அங்க அடையாளங்கள் இருக்கிறதா என்பதனை சரிபார்த்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது.