Chiranjeevi web
சினிமா

’விஜயை நினைவூட்டும் தோற்றம்..’ ஜேசன் சஞ்சயை வாழ்த்திய நடிகர் சிரஞ்சீவி!

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள `சிக்மா' படம் குறித்து, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Johnson

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா, சம்பத், ராஜூ சுந்தரம் எனப் பலரும் நடித்துள்ள படம் `சிக்மா'. இப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் விளம்பரங்களுக்கான நிகழ்வுகள் பல நடைபெற்று வருகின்றது. அப்படி நேற்று மாலை ஹைதராபாத்தில் Pre Release நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய சிரஞ்சீவி, "சமீபகாலமாக நல்ல கருத்துள்ள திரைப்படங்களை தெலுங்கு ரசிகர்கள் சின்ன படம், பெரிய படம் என்று பார்க்காமல் கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் ‘சிக்மா’ படமும் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன். ஜேசன் சஞ்சய்யைப் பார்க்கும்போது அவரது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகரை எனக்கு நினைவூட்டுகிறது.

Jason Sanjay

எனது ஆரம்பகாலத்தில் 'சட்டனிகி கல்லு லேவு', 'தேவாந்தகுடு' போன்ற சிறந்த படங்களை அவர் எனக்கு இயக்கியுள்ளார். நடிகர் விஜயின் ஒரு படத் தொடக்க விழாவிற்கு நானும் ரஜினிகாந்தும் சென்று வாழ்த்தினோம். தற்போது அதே குடும்பத்திலிருந்து வந்துள்ள சஞ்சய் என்னை அழைத்ததும் மகிழ்ச்சியுடன் வந்தேன். 'ஏன் தந்தையைப்போல நடிகராகாமல் இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தாய்' என்று சஞ்சய்யிடம் கேட்டேன். அதற்கு 'தனக்கு எழுதவும் இயக்கும் வேலையும்தான் பிடிக்கும்’ என்றார். தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர், பாட்டி சோபா ஆகியோரின் எழுத்து மற்றும் இயக்கும் திறமையின் மரபணு அவருக்குள்ளேயே இருக்கிறது. சஞ்சய் பார்ப்பதற்கு 1993-95 காலகட்டத்தில் விஜய் எப்படி இருந்தாரோ, அப்படியே இருக்கிறார். அவரது தாத்தாவும் தந்தையும் திரைத்துறையில் உச்சத்தை அடைந்ததுபோல, ஜேசன் சஞ்சயும் இயக்குநராகப் பெரிய உயரத்தைத் தொடுவார்" என வாழ்த்திப் பேசினார்.