ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘அருண் விஜய் 33’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.
இயக்குநர் ஹரி இயக்கத்தில் ‘தமிழ்’, ’சாமி’, ’கோவில்’, ’அருள்’, ’ஐயா’, ’ஆறு’, ’தாமிரபரணி’, ’சிங்கம்’, ’வேங்கை’, ‘சிங்கம் 2’ ‘சிங்கம் 3’உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளன. விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், விஷால், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் இயக்குநராக பணியாற்றியுள்ள ஹரி இதுவரை தனது மனைவியின் அண்ணனும் நடிகருமான அருண் விஜய்யுடன் பணியாற்றியது இல்லை. இருவரும் எப்போது இணைவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துவந்த நிலையில், கடந்த வருட இறுதியில் இருவரும் இணையும் ’அருண் விஜய் 33’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்கள்.
கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கால் தடைப்பட்டுப் போனது. இந்த நிலையில், தற்போது அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ளதால் மீண்டும் இன்றுமுதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனை உற்சாகமுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அருண் விஜய்.
அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ’த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ’இமைக்கா நொடிகள்’ படங்களைத் தயாரித்த சக்திவேல் இப்படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.