ஹரி - அருண் விஜய் இணைந்துள்ள ‘அருண் விஜய் 33’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தலைப்பும் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக ‘அருண் விஜய் 33’ படத்தில் இணைந்துள்ளனர். யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அருண் விஜய்க்கு அண்ணனாக சமுத்திரகனி நடிக்கிறார். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய, இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கால் தடைப்பட்டுப் போனது.
இந்த நிலையில், தற்போது அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ளதால் மீண்டும் கடந்த ஜூலை 28 ஆம் தேதிமுதல் ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி, பழனி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இது அருண் விஜய்யின் 33 வது படம் என்பதால் படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நடிகர்கள் ஆர்யா, அதர்வா, சிபி ராஜ், சாந்தனு, விக்ரம் பிரபு, பிரசன்னா, இயக்குநர்கள் பா.ரஞ்சித், அறிவழகன், நடிகைகள் வேதிகா,ஐஸ்வர்யா ராஜேஷ்,நிக்கி கல்ராணி,ரெஜினா, மகிமா நம்பியார் உள்ளிட்டோர் 33 திரைத்துறையினர் வெளியிட்டுள்ளனர். படத்திற்கு ‘யானை’ என்று பெயரிட்டுள்ளனர். ஏற்கனவே, ஹரி இயக்கத்தில் ’சேவல்’, ’சிங்கம்’, ’சிங்கம் 2, ’சிங்கம் 3’என ஏற்கெனவே விலங்குகள் பறவைகள் பெயரில் படப்பெயர்களை வைத்தார்.
தற்போது, அதேபாணியில் ‘யானை’ என்று படத்திற்குப் பெயரிட்டுள்ளார். அதோடு, அருண் விஜய்யின் நான்கு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். சிகரெட் பிடித்துக்கொண்டு கழுத்தில் மாலையை துண்டுபோல் போட்டுக்கொண்டு மிரட்டலாக காட்சியளிக்கும் அருண் விஜய் கவனம் ஈர்க்கிறார்.