phule movie, actor anurag kashyap x page
சினிமா

’புலே’ பட ரிலீஸ் விவகாரம் | “நாட்டில் சாதிகளே இல்லையென்றால்..” காட்டமாய் விமர்சித்த அனுராக் காஷ்யப்!

தள்ளிப்போகும் 'புலே’ படம் ரிலீஸ் குறித்து பிரபல பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் கஷ்யப் தற்போது பதிலளித்துள்ளார்.

Prakash J

சமூகச் சீர்திருத்தவாதி ஜோதிராவ் புலேவின் வாழ்க்கை வரலாறு ‘புலே’ எனும் தலைப்பில் இந்தியில் உருவாகியுள்ளது. ஆனந்த் நாராயன் மகாதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜோதிராவ் புலேவாக பிரதிக் காந்தி நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், மகாராஷ்ட்ராவிலுள்ள பிராமணர் சமூகத்தின் ஒரு பகுதியினர் தாங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்பேரில் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. அதாவது, இப்படம் ஜோதி ராவ் புலேவின் 198வது பிறந்தநாளான கடந்த 11ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இப்படம் வருகிற 25ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது.

actor anurag kashyap

இதனால் பிரமாண சமூக எதிர்ப்பால் படம் தள்ளிப்போனதா இல்லை சென்சார் போர்டு விஷயங்களால் தள்ளிப் போனதா என்ற கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக பிரபல பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் கஷ்யப் தற்போது பதிலளித்துள்ளார். அவர், “நாட்டில் சாதிகளே இல்லையென்றால், ஜோதிபாவும் சாவித்ரி புலேவும் அதை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் என்ன? தணிக்கைக்குச் செல்லும் ஒரு படத்தை, சென்சார் அதிகாரிகள் நால்வரை தாண்டியும் சில குழுக்கள் பார்ப்பதும், பின் அதை எதிர்ப்பதும் எப்படி? இங்கு மொத்த சிஸ்டமே தவறாக உள்ளது. இப்படி இன்னும் எத்தனை படங்களை முடக்கியுள்ளார்கள் என தெரியவில்லை. சாதி இல்லையென்றால், நீங்கள் எப்படி பிராமணர்களானீர்கள்? மோடி சொன்னபடி, ஒன்று பிராமிணிசம் ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும்; அல்லது நாங்கள் முட்டாளாக்கப்பட்டிருக்க வேண்டும். மக்கள் முட்டாள் அல்ல” என அவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.