anurag kashyap x page
சினிமா

’புலே’ பட ரிலீஸ் விவகாரம் | பிராமண சமூகம் குறித்த கருத்து.. மன்னிப்பு கேட்டார் அனுராக் காஷ்யப்!

'புலே’ திரைப்படம் தொடர்பாக பிராமணர் சமூகத்தை விமர்சித்திருந்த நடிகர் அனுராக் கஷ்யப் தற்போது மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

Prakash J

சமூகச் சீர்திருத்தவாதி ஜோதிராவ் புலேவின் வாழ்க்கை வரலாறு ‘புலே’ எனும் தலைப்பில் இந்தியில் உருவாகியுள்ளது. ஆனந்த் நாராயன் மகாதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜோதிராவ் புலேவாக பிரதிக் காந்தி நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், மகாராஷ்ட்ராவிலுள்ள பிராமணர் சமூகத்தின் ஒரு பகுதியினர், தாங்கள் தவறாகc சித்தரிக்கப்பட்டிருப்பதாகk கூறி இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்பேரில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. அதாவது, இப்படம் ஜோதி ராவ் புலேவின் 198வது பிறந்தநாளான கடந்த 11ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இப்படம் வருகிற 25ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது.

anurag kashyap

இதனால் பிரமாண சமூக எதிர்ப்பால் படம் தள்ளிப்போனதா இல்லை சென்சார் போர்டு விஷயங்களால் தள்ளிப் போனதா என்ற கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக பிரபல பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் கஷ்யப், “நாட்டில் சாதிகளே இல்லையென்றால், ஜோதிபாவும் சாவித்ரி புலேவும் அதை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் என்ன? தணிக்கைக்குச் செல்லும் ஒரு படத்தை, சென்சார் அதிகாரிகள் நால்வரை தாண்டியும் சில குழுக்கள் பார்ப்பதும், பின் அதை எதிர்ப்பதும் எப்படி? இங்கு மொத்த சிஸ்டமே தவறாக உள்ளது. இப்படி இன்னும் எத்தனை படங்களை முடக்கியுள்ளார்கள் என தெரியவில்லை. சாதி இல்லையென்றால், நீங்கள் எப்படி பிராமணர்களானீர்கள்? மோடி சொன்னபடி, ஒன்று பிராமிணிசம் ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும்; அல்லது நாங்கள் முட்டாளாக்கப்பட்டிருக்க வேண்டும். மக்கள் முட்டாள் அல்ல” என காட்டமாக விமர்சித்திருந்தார்.

அவருடைய இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, மத்திய அமைச்சர் சதீஷ் சந்திர துபே, அனுராக் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினார். தவிர ஜெய்ப்பூரில் அவர் மீது ஒரு போலீஸ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், தற்போது அனுராக் கஷ்யப் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

anurag kashyap

இதுகுறித்து அவர், “கோபத்தில், ஒருவருக்குப் பதிலளிக்கும்போது என் வரம்புகளை மறந்து இத்தகைய கருத்துளைத் தெரிவித்துவிட்டேன். முழு பிராமண சமூகத்தைப் பற்றியும் நான் மோசமாகப் பேசினேன். என்னால் அவர்கள் காயப்படுகிறார்கள். என் குடும்பத்தினரால் காயப்படுகிறார்கள். நான் மதிக்கும் பல அறிவுஜீவிகள், என் கோபத்தாலும் நான் பேசிய விதத்தாலும் காயப்படுகிறார்கள். யாரோ ஒருவரின் மலிவான கருத்துக்குப் பதிலளிக்கும்போது கோபத்தில் இதை எழுதிய இந்த சமூகத்திடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது பேச்சு மற்றும் தவறான மொழிக்காக எனது நண்பர்கள், எனது குடும்பத்தினர் மற்றும் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும், “இனிவரும் காலங்களில் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதாகவும், இதுபோன்ற விஷயங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும், தொடர்புடைய பிரச்னைகள் குறித்துப் பேச வேண்டியிருந்தால், சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவேன்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.