சினிமா

கவினின் ‘அஸ்குமாரோ’ பாடலை பாராட்டிய விஜய்

sharpana

நடிகர் விஜய், ‘பிக்பாஸ்’ புகழ் கவினின் ‘அஸ்குமாரோ’ பாடலை பாராட்டியிருக்கிறார்.

’மாஸ்டர்’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில், நடிகர் கவின் உதவி இயக்குநராக பணிபுரிகிறார். ’சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் தனது தனித்துவ நடிப்பால் கவனம் ஈர்த்த கவின், பிக்பாஸ் மூலம் புகழடைந்தார். ஏற்கனவே, ’நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது வினீத் இயக்கத்தில் ‘லிஃப்ட்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ள கவின் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘டாக்டர்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். தற்போது, ‘பீஸ்ட்’ படத்திலும் உதவி இயக்குநராக இருப்பவர், ஷூட்டிங்கில் நடந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அந்த வீடியோவில். ’பீஸ்ட்’பட பூஜையின்போது விஜய் சார் வருவதற்காக அனைத்து உதவி இயக்குநர்களும் காத்துக்கொண்டிருந்தோம். பட பூஜையின் முந்தையநாள்தான் என்னுடைய ‘அஸ்குமாரோ’ பாடல் வெளியாகி இருந்தது. பூஜையில் அனைவரிடமும் ஹாய் சொல்லிவிட்டு என் அருகில் வந்த விஜய் சார், ’உங்க பாட்டு பார்த்தேன் கவின். செம்மையா இருந்தது’ என்று பாராட்டினார். அதோடு, அனைவருடனும் புகைப்படம் எடுக்கும்போது ஓரமாக இருந்த என்னை ‘இங்க வாங்க கவின். பக்கத்துல வந்து நில்லுங்க’ என்றது என்னை இன்னும் உற்சாகமாக்கி ’எனக்கிது போதும்’ என்றாகிவிட்டது. சிவாங்கி, தரண் குமார் பாடிய’அஸ்குமாரோ’ ஆல்பம் பாடலில் கவின் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.