ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் உள்ள சந்தியா திரையரங்கில் இரவு 9.30 மணிக்கு புஷ்பா-2 பிரீமியர் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற 35 வயதான ரேவதி என்ற பெண் கூட்டத்தில் சிக்கி மயங்கி விழுந்தார். உடனே, அப்பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.
அவரது மகனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு திரைப்படக் குழுவினர் நஷ்ட ஈடாக ரூ. 50 லட்ச ரூபாயும் வழங்கியுள்ளனர். தனிப்பட்ட முறையில் அல்லு அர்ஜுனும் ரூ 25 லட்சம் வழங்கினார்.
பெண் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன், திரையரங்கின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீனும் வழங்கப்பட்டிருந்தது. நடிகர் அல்லு அர்ஜுன் இந்த வழக்கில் 11 ஆவது நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, உயிரிழந்த ரேவதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி அடையாளம் தெரியாத நபர்கள் அல்லு அர்ஜுனின் வீட்டில் கடந்த ஞாயிறன்று கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய ஆறு நபர்களையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களுக்கு ஜாமீனும் வழங்கியுள்ளனர்.
இப்படியான தெலங்கானாவில் அல்லு அர்ஜுன் விவகாரம்தான் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. தெலங்கான முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியே இந்த விவகாரத்தில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான், நடிகர் அல்லு அர்ஜுன் தெலங்கானாவின் சிங்கடப்பள்ளி காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்தார். அவரிடம் காவல்துறையினர் வாக்குமூலத்தினைப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் ரகுநந்தன் ராவ், “மாநிலத்தில் உள்ள மற்ற வழக்குகளைப் போல இதுவும் ஒரு சிறிய வழக்குதான். அந்த நெரிசலுக்கு காவல்துறை அல்லது நடிகரின் பங்கு என்ன? திரையரங்க நிர்வாகமா? அல்லது காவல்துறையா? யார் தோல்வி அடைந்தார்கள் என்பதைப் பார்க்காமல் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்பது எனது வேண்டுகோள். தனிநபருக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கக்கூடாது. ஏனெனில், இதே விவகாரத்தில் 30 நாட்களுக்கு காவல்துறை பெயில் வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுஒருபுறம் இருக்க புஷ்பா திரைப்படம் வசூலில் சாதனைகளைப் படைத்து வருகிறது. திரைப்படம் வெளியாகி 19 நாட்கள் முடிவில் உலகளவில் மொத்தமாக ரூ.1500 கோடியைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.