அல்லு அர்ஜுன் கைது எக்ஸ் தளம்
சினிமா

புஷ்பா 2 விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜூன் கைது! என்ன நடந்தது?

பெண் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

சுகுமார் இயக்கி நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிச 5ம் தேதி வெளியானது புஷ்பா 2 திரைப்படம். இதற்காக டிச 5 அன்று ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் உள்ள சந்தியா திரையரங்கில் அதிகாலையில் புஷ்பா-2 பிரீமியர் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற 35 வயதான ரேவதி என்ற பெண் கூட்டத்தில் சிக்கி மயங்கி விழுந்தார். பின்னர், அவர் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியானது.

இதனையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன் மீதும், அதிகளவிலான கூட்டத்தை ஏற்பாடு செய்த சந்தியா தியேட்டர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குதாக அல்லு அர்ஜுன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், பெண் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததற்காக, திரையரங்க நிர்வாகிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜூன் நீதிமன்றத்தை நாடி உள்ளார். அந்த மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இந்நிலையில்தான் நடிகர் அல்லு அர்ஜூனை இன்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நடிகர் நடிகைகளை காணும்போது, இத்தகைய பதற்றமான சூழல் ஏற்படுவது என்பது வழக்கமாக இருக்கும்பட்சத்தில், அல்லு அர்ஜூனின் கைது நடவடிக்கை இதுப்போன்ற பாதுக்காப்பு குறைப்பாடு தொடர்பான வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.