நடிகர் அஜித்குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’விடாமுயற்சி’. த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா கசன்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
மீகாமன், தடையறத்தாக்க, தடம், கலகத்தலைவன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கும் மகிழ் திருமேனி, க்ரைம் த்ரில்லர் கதைகளை எடுப்பதில் பெயர்போனவர் என்பதால் ’விடாமுயற்சி’ படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது.
இந்நிலையில் எதாவது அப்டேட் விடுங்கப்பா என காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு, படத்தின் டீசருக்கான அப்டேட்டானது பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பதற்கு முன்னதாகவே சமூகவலைதளங்களில் வெளியானது இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
படத்தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாகவே, விடாமுயற்சி படத்தின் டீசர் “இரவு 11.08 மணிக்கு சன் டிவி யூடியூப் சேனலில் வெளியாகும்” என தகவல் வெளியானது. அதனைத்தொடர்ந்து லைகா நிறுவனமும் அதனை உறுதிசெய்து பதிவிட்டது.
பின்னர் வெளியான விடாமுயற்சி டீசரானது காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்தது. டீசரை பொறுத்தவரையில் எந்த ஆரவாரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாமலே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. டீசரின் தொடக்கத்தில் யாரையே கட்டித்தூக்குப்போடும் காட்சியும், தொடர்ந்து காணாமல் போனவர்களின் விவரங்கள் கொண்ட காட்சியும் இடம்பிடித்துள்ளன. உடன் வில்லத்தனமாக சிரிக்கும் அர்ஜுன், ரெஜினா கசன்ட்ரா வரும் காட்சிக்கு பிறகுதான் அஜித்தே டீசரில் வெளிவருகிறார். பின்னர் ஒரேயொரு காட்சியில் மட்டும் த்ரிஷா சிரித்த முகத்துடன் வருகிறார்.
தொடர்ந்து எதையோ தொலைத்துவிட்டு தேடும் நபராக சோக முகத்துடன் உலாவரும் அஜித், இறுதியில் செம சண்டையில் ஈடுபடும் காட்சிகளும் இடம்பெறுகின்றன. மொத்தமாக கூஸ்பம்ப் ஆகும் அளவு காட்சிகள் எதுவும் இல்லை. முடிவில் வரும் “எல்லோரும் எல்லாமும் கடைவிடும்போது உன்னை நம்பு விடாமுயற்சி திருவினையாக்கும்” என்ற வசனம் மட்டுமே மாஸ்ஸாக இடம்பெற்றுள்ளது. மற்றபடி படத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனி இப்படியொரு ஷட்டிலான டீசர் கட்டை வெளியிட்டுள்ளார்.