சினிமா

கொரோனா முடிவுக்கு வரும் வரை 'வலிமை' ரிலீஸ் இல்லையா? - அஜித் தரப்பு விளக்கம்

கொரோனா முடிவுக்கு வரும் வரை 'வலிமை' ரிலீஸ் இல்லையா? - அஜித் தரப்பு விளக்கம்

sharpana


கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர் முடிவுக்கு வரும் வரை 'வலிமை' படத்தை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளரிடம் அஜித் கேட்டுக்கொண்டதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், இது போலியான தகவல் என்று அஜித் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் மார்ச் 22-ஆம் தேதிமுதல் கொரோனா தொற்றால் ஊரடங்கு போடப்பட்டது. இதனால், தியேட்டர்கள் மூடப்பட்டன. ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’, விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம், சூர்யாவின் ’சூரரைப் போற்று’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில், நவம்பர் 10 ஆம் தேதிமுதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு போட்டிருந்தது. அது தற்போது 100 சதவீத பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ படங்கள் பொங்கலுக்கு வெளியாவதால் விஜய், சிம்பு உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இதுதொடர்பாக கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் அனுமதியை சமூக ஆர்வலர்களும் மத்திய அரசும் பொது மக்களும் கொரோனா தொற்றச்சத்தால் எதிர்த்து வருகிறார்கள். ஏசி தியேட்டரில் காற்றோட்டமில்லாமல் மூன்று மணி நேரம் தொடர்ந்து படம் பார்க்கும்போது கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்பதால் ’மக்கள் மீது அக்கறை இல்லை’ என்று இன்னும் பலர் விஜய்யையும் சிம்புவையும் விமர்சித்து வருகிறார்கள். திரைத்துறையிலிருந்தே 100 சதவீத பார்வையாளர்களுக்கு பதில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று அரவிந்த் சாமி, குஷ்பு உள்ளிடோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதுபோன்ற காரணங்களால் கொரோனா தொற்று பரவல் சரியாகும்வரை தனது ’வலிமை’ படத்தை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் கேட்டுக்கொண்டதாக தகவல் பரவி வருகிறது.

ஏற்கெனவே, அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள். இதனால், இம்மாத இறுதிக்குள் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித்தின் 50 வது பிறந்தநாளான வரும் மே 1 ஆம் தேதி ’வலிமை’ படத்தினை வெளியிடுவதாக திட்டமிடப்பட்டது.

இந்நிலையில்தான் அஜித், தியேட்டருக்கு ரசிகர்கள் வந்தால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதற்கு நாமே காரணமாக அமைந்துவிடக்கூடாது. அதனால், நிலைமை சரியாகும்வரை படத்தை வெளியிட வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார் என்று 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தியை மேற்கோள்காட்டி தகவல்கள் பரவி வந்தன.

இது தொடர்பாக அஜித் தரப்பிடம் விசாரித்தபோது, அது போலியான செய்தி என்றும், அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றும் நம்மிடம் விளக்கம் அளித்தனர்.