மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளை சார்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 23 பெண்கள் உட்பட 139 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் திரைப்பட ரசிகர்களை கொண்டாட வைத்தது நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டதுதான். நடிகர் அஜித் குமார் விருதுக்கு நன்றி தெரிவித்த நிலையில், திரைத்துறையினர் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் நடிகர் பார்த்திபனின் சமூக வலைதள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது விருது தொடர்பாக அஜித்தை அணுகுவதற்கு பார்த்திபனிடன் அஜித்தின் போன் நம்பரை கேட்டுள்ளனர். நடிகர் பார்த்திபன்தான் அஜித்தின் PRO சுரேஷ் சந்திரா போன் நம்பரை வாங்கி கொடுத்துள்ளார்.
இது தொடர்பான நடிகர் பார்த்திபனின் பதிவில்; இன்று மதியம் ஒரு இசை பிரபலம், நண்பர் திரு அஜீத் குமாரின் எண் கேட்க,’ஏன்?” கேட்டேன், மத்திய அரசு அவரை அவசரமாக அணுக விரும்புகிறது. உடனே கொடுங்கள் என்றது அக்குரல். நல்ல விஷயம்தான் என்பதை புரிந்துக் கொண்டு நான் முயற்சித்தேன். ஒருவழியாக அவரின் P r o திரு சுரேஷ் சந்திராவின் தொடர்பை ஏற்படுத்தினேன். மாலையில் வந்த செய்தி அஜீத் கழுத்துக்கு மாலை என்பது மீறி,’ தலை’க்கு வைர கிரீடம் ஆனது. Congratulations PADMABHUSHAN AJITH KUMAR!!!" இவ்வாறு பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.
பார்த்திபன், அஜித் இருவரும் இணைந்து 1999 ஆம் ஆண்டு வெளியான நீ வருவாய் என படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.