சினிமா

'வருடத்திற்கு ஒரு படமாவது நடிங்க'- கமலிடம் உதயநிதி கோரிக்கை

'வருடத்திற்கு ஒரு படமாவது நடிங்க'- கமலிடம் உதயநிதி கோரிக்கை

ச. முத்துகிருஷ்ணன்

விக்ரம் ட்ரெய்லர் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்குமாறு கமல்ஹாசனிடம் கோரிக்கை வைத்தார்.

நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜூன் 3-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் 'விக்ரம்' படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் “கமல் போன்ற சிறந்த கலைஞர் இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவதை மிகச் சிறந்ததாக பார்க்கிறேன். அனிருத் பிரமிப்பான மனிதர். மக்கள் கிட்ட நெருங்குற இசையை அவரால் தொடர்ந்து கொடுக்க முடிகிறது. தமிழ் சினிமா கண்டென்ட் இல்லாம இருக்கிறதா எல்லாரும் சொல்றாங்க. அப்படியெல்லாம் இல்லை. ஒரு காலத்துல தமிழ் சினிமாதான் முன்னுதாரணமாக இருந்தது. தற்போது அதை விக்ரம் படம் பூர்த்தி செய்யும் என நம்புறேன். எனக்கு விருமாண்டி படம் பிடிக்கும். மதுரையை பின்னணியாக வைத்து கமல்ஹாசனுடன் ஒரு சம்பவம் செய்யனும்னு விரும்புறேன்” என்று தான் கமலுடன் இணையவுள்ள அடுத்தப் படம் குறித்து சூசகமாக தெரிவித்தார்.

அடுத்து பேசிய நடிகரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் “கமல்ஹாசனுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஓடுற ரயிலில் நானும் இறுதியில் ஏறிக்கொண்டேன். எல்லோரும் கேட்டார்கள். படத்தை தரவேண்டும் என்று கமல்ஹாசனை மிரட்டிடிங்களாமே என! அப்படிலாம் மிரட்டவில்லை. அவர் மிரட்டலுக்கு பயப்படும் ஆளும் கிடையாது. நீங்கள் அரசியல் கட்சி தொடங்கிட்டீங்க. அதில் சிறப்பாகவும் செய்துகொண்டு இருக்கின்றீர்கள். இருந்தாலும் வருடத்திற்கு ஒரு படமாவது நடியுங்கள்.” என்று கூறினார்.