ஆஸ்கர் விருதில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பிரிவு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் சினிமாவின் முக்கிய விருதாக கருதப்படுவது, ஆஸ்கர் எனப்படும் அகாடமி விருது விழா. இதில் விருது பெறுவது ஹாலிவுட் நடிகர்களுக்கு பெரிய கவுரவம். தமிழரான ஏ.ஆர்.ரகுமான், ’ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என இந்த விருது 24 பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆஸ்கர் தொடங்கிய பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2001-ம் ஆண்டு அனிமேஷன் படங்களுக்காக ஒரு சிறப்புப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு தற்போது மேலும் ஒரு பிரிவை அறிமுகப்படுத்த இருப்பதாக ஆஸ்கர் நிர்வாகம் கடந்த மாதம் அறிவித்தது.
அதன்படி 'சாதனை படைத்த பிரபலமான திரைப்படம்’ (Outstanding Achievement in Popular Film) என்ற பிரிவை அறிமுகப்படுத்த முடிவு செய்தனர். உலகம் முழுவதும் பிரபலமடைந்த ஒரு படத்துக்கு இந்த விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 91-வது ஆஸ்கர் விழா 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அப்போது, மேலும் சில மாற்றங்களையும் கொண்டு வர இருப்பதாகவும் ஆஸ்கர் நிர்வாகம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் இந்தப் புதிய படப் பிரிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. இதையடுத்து அடுத்த வருடம் வழங்கப்படும் விருதுகளில் இந்தப் பிரிவு இடம்பெறாது என கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி அகாடமியின் தலைவர் ஜான் பெய்லி கூறும்போது, ‘இந்த பிரிவுக்கு வரும் எதிர்மறை கருத்துகள் வியப்பாக இருக்கிறது. இப்போது உருவாக்கப்படும் அனைத்துவிதமான படங்களுக்கும் சர்வதேச அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை’ என்றார்.