சினிமா

”ஊரடங்கு காலத்திலும் 100 கிலோ எடையை பராமரித்தது கடினமாக இருந்தது”-அபிஷேக் பச்சன் ஓபன் டாக்

sharpana

’பாப் பிஸ்வாஸ்’ படத்திற்காக உடல் எடையை 100 கிலோவுக்குமேல் அதிகரித்த நடிகர் அபிஷேக் பச்சன், கொரோனா ஊரடங்கில் அதே உடல் எடையை குறையாமல் தக்க வைத்த  அனுபவம் பற்றி மனம் திறந்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிப்பில் விரைவில் ‘பாப் பிஸ்வாஸ்’ படம் வெளியாகவிருக்கிறது. கடந்தவாரம் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரில் நடிகர் அபிஷேக் பச்சன் உடல் குண்டாகக் காணப்பட்டு கவனம் ஈர்த்தார். அவரின் தந்தை அமிதாப் பச்சன் ட்ரெய்லரைப் பகிர்ந்து “என் மகன் என்பது பெருமையாக உள்ளது” என்று பாராட்டியிருந்தார்.

உடல் எடையைக் கூட்டி அனைவரையும் கவனம் ஈர்க்க வைத்த அபிஷேக் பச்சன், அந்த அனுபவம் குறித்து இந்தியா டுடேவுக்கு பேட்டியளித்துள்ளார். “பாப் பிஸ்வாஸ் படத்திற்காக 100 லிருந்து 105 கிலோ எடையைக் கூட்டினேன். 80 சதவீத படப்பிடிப்பு முடியும் நிலையில், கொரோனா ஊரடங்கு அமல்படுத்திவிட்டார்கள். மீதமுள்ள படப்பிடிப்பு 10 அல்லது 15 நாட்களில் நிறைவடைய இருந்தது. ஆனால், ஊரடங்கு போட்டதால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்கள். இதனால், நான் மனதளவில் மிகவும் சிரமப்பட்டேன்.

லாக்டவுன் முழுவதும் நான் அதே, 100 கிலோ உடல் எடையைப் பராமரிக்கவேண்டி இருந்ததால் கடினமாக இருந்தது. ஆரம்பத்தில், உடல் எடையைக் கூட்ட கொல்கத்தாவில் இருந்து நிறைய இனிப்பு வகைகளை உண்டேன். பின்பு கொரோனாவில் அந்த எடையைக் பராமரிக்க சிரமப்பட்டேன்” என்று பகிர்ந்திருக்கிறார்.