கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் இன்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.
கடந்த மாதம் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனாத்தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்த சில நாட்களில் அபிஷேக் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யாராயுக்கும், அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் கடந்த ஜூலை 27 ஆம் தேதி வீடு திரும்பிய நிலையில் நடிகர் அமிதாப்பச்சனும் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் அபிஷேகப் பச்சன் மட்டும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று அவரும் குணமடைந்து வீடு திரும்பினார்.
இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்த அபிஷேக் பச்சன் "இன்று பிற்பகல் நான் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என தெரியவந்தது. இதை நான் வெல்வேன் என்று சொன்னேன். எனக்கும் எனது குடும்பத்துக்கும் நீங்கள் செய்த பிரார்த்தனைகளுக்கு நன்றி. நானாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்களுக்கு அவர்கள் செய்த எல்லாவற்றிற்கும் எனது நன்றிகள்" என பதிவிட்டுள்ளார்.