இயக்குநர் பாரதிராஜா web
சினிமா

தமிழ் பேசிய சினிமாவை, தமிழ் சினிமாவாக மாற்றியவர்.. பாரதிராஜாவின் கதை!

தமிழ் பேசிய சினிமாவை, தமிழ் சினிமாவாக மாற்றிய பெருமைக்குறிய இயக்குநர் இமயம் இளையராஜா, உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 84 வயதில் காலமானார்.

PT WEB

தமிழ் சினிமாவை ஸ்டுடியோவிலிருந்து கிராமத்துக்கு இழுத்து வந்து மண்வாசனையுடன் புதிய மொழி கொடுத்த புரட்சிகர இயக்குநர் பாரதிராஜா, 1941 அல்லிநகரத்தில் பிறந்து, நாடக மேடைகளில் இருந்து ‘16 வயதினிலே’ மூலம் வெடித்தார். இளையராஜா, பாக்யராஜ், ராதிகா உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தி, 44க்கும் மேற்பட்ட படங்கள், பல விருதுகள் மூலம் தமிழ் சினிமாவை முன்–பின் எனப் பிரித்தவர்; இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இன்று உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் அவர் உருவாக்கிய தாக்கம் சாதாரணமானது கிடையாது. ஸ்டுடியோவுக்குள் உழன்ற சினிமாவை கிராமத்துக்கு அழைத்து சென்று மண்வாசனையுடன் படத்தை கொடுத்தவர். கதாநாயகனுக்கான வரையறைகளை மாற்றி நாயகனுக்கு கோவணம் கட்டி வெத்தலை சொத்தப்பும் சப்பாணியாக மாற்றிக் காட்டியவர்.

இயக்குநர் பாரதிராஜா மரணம்

தமிழ் சினிமாவில் அவர் வருகைக்கு முன்.... அவர் வருகைக்கு பின் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர். அவரது பயணம் நீண்ட பயணம்....

பாரதிராஜா தொடக்கம்..

பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம். அவரது தந்தை பெயர் பெரிய மாயத்தேவர். தாயார் பெயர் மீனாட்சி அம்மாள் என்கிற கருத்தம்மாள். 1941ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு சகோதரிகள் மூவர். சகோதரர்கள் மூவர். பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி.

படிக்கும் போதே நடிக்கும் ஆர்வம் அவருக்கு வந்தது. நாடகங்கள் பார்த்து வளர்ந்தவர், நாடகம் போடும் அளவுக்கு கதை எழுதினார். சுகாதார ஆய்வாளராக வேலை கிடைத்தது. ஊர் ஊராக சென்று மக்களிடம் நோய் பற்றி விசாரித்து ரிப்போர்ட் செய்கிற வேலை.

அப்படி ஒரு முறை பண்ணைபுரம் சென்ற போது அங்கு இசை வாசிக்கும் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோரை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. நண்பர்கள் ஆனார்கள். கம்யூனிஸ்ட் மேடைகளில் இசை வாசிக்க அண்ணன் பாவலர் வரதராஜனோடு சென்றவர்கள், பாரதிராஜாவின் நாடகத்திற்கு இசை வாசிக்க மதுரை சென்றார்கள்.

பாரதிராஜா இயக்கிய 'ஊர் சிரிக்கிறது', 'சும்மா ஒரு கதை' போன்ற நாடகங்கள் புதுமையாக இருந்தன. இவர்களின் நாடக ஆர்வத்தை பார்த்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவின் அண்ணன் மகன் 'அன்னக்கிளி' செல்வராஜ், இவர்களுடன் நட்பு கொண்டார்.

சினிமாவுக்கு சென்றால் பெரிய அளவில் புகழ் பெறலாம் என்று கருத்துக்கள் பகிர்ந்து கொண்டார்கள். முதலில் 'அன்னக்கிளி' செல்வராஜ் சினிமாவில் சேர சென்னைக்கு வந்தார். அதன் பிறகு பாரதிராஜா வந்தார். சினிமாவில் உடனே வாய்ப்பு அமையவில்லை. வாழ்க்கை நடத்துவதே பெரும் போராட்டமாக இருந்தது.

இந்த நிலையில் பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் புறப்பட்டு சென்னைக்கு வந்தார்கள். திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் அறிமுகம் கிடைக்க அவரிடம் கிட்டார் வாசிக்க சென்றார், இளையராஜா.

புட்டண்ணா கனகலிடம் 'இருளும் ஒளியும்' படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்த பாரதிராஜா, அடுத்து கே.ஆர்.ஜி. தயாரிப்பில் கிருஷ்ணன் நாயர் இயக்கிய 'தலைபிரசவம்' படத்தில் உதவி இயக்குராக பணிபுரிந்தார். அடுத்து கே.ஆர்.ஜி. தயாரிப்பில் ஏ.ஜெகநாதன் இயக்கிய 'அதிர்ஷ்டம் அழைக்கிறது' படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்தார்.

தனது படங்களில் பாரதிராஜாவின் திறமையை அறிந்த கே.ஆர்.ஜி. அவருக்கு படம் இயக்கும் வாய்ப்பை வழங்கினார். முத்துராமன் கதாநாயகன், ஜெயலலிதா கதாநாயகி, வி.குமார் இசையமைப்பாளர் என்று முடிவாகி படத்திற்கு 'சொந்த வீடு' என்று பெயர் சூட்டப்பட்டது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஜெயலலிதா படத்தில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்ததால் அந்தப் படம் டிராப் ஆனது. அதன் பிறகு கே.ஆர்.ஜி.யின் அலுவலகத்துக்கு பைனான்சியராக வந்த எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் பேசிக் கொண்டிருந்த போது 'மயிலு' என்கிற கதையை பாரதிராஜா சொல்லி இருக்கிறார். அந்த கதை எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு பிடித்துவிட்டது. அதுதான் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் பாரதிராஜா இயக்கிய '16 வயதினிலே'.

தேவராஜ் - மோகன் இயக்கத்தில் 'அன்னக்கிளி' படம் வெளியாகி பெரும் வெற்றிப் படமாக அமைந்து இளையராஜா புகழ் பெற்றார். உடனே தனது நண்பர் இளையராஜாவை '16 வயதினிலே' படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை தொடங்கினார், பாரதிராஜா. 1977ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியான '16 வயதினிலே' படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்து, வசூலில் சாதனை படைத்தது. முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருது பெற்றார்.

பின்னர் 'கிழக்கே போகும் ரயில்', 'சிவப்பு ரோஜாக்கள்' என முத்திரை பதிக்கும் படங்களை இயக்கினார்.

16 Vayathinile

தனது உதவியாளர் கே.பாக்யராஜ் நடிப்பில், தனது தயாரிப்பில் 'புதிய வார்ப்புகள்' படத்தை இயக்கிய பாரதிராஜா, இன்னொரு உதவியாளரான கே.விஜயன், சுதாகர், ராதிகா நடிப்பில் 'நிறம் மாறாத பூக்கள்' படத்தை இயக்கினார். இதில் கே.விஜயனுக்கு அவரே டப்பிங் பேசி இருந்தார். அடுத்து 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அவரே கதாநாயகனாக அறிமுகமானார்.

மீண்டும் தனது உதவியாளர் மணிவண்ணன் சொன்ன கதையில் 'அலைகள் ஓய்வதில்லை' என்கிற படத்தை தனது நண்பனும், இளையராஜாவின் சகோதரருமான பாஸ்கர் தயாரிப்பில் இயக்கினார். அந்தப் படத்தில் கார்த்திக் நாயகனாகவும், ராதா கதாநாயகியாகவும், தியாகராஜன் வில்லனாகவும் அறிமுகமானார்கள்.

மேலும், டிக்டிக்டிக், காதல் ஓவியம், வாலிபமே வாவா, மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, என்னுயிர் தோழன், புது நெல்லு புது நாத்து, நாடோடி தென்றல், கேப்டன் மகள், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன், தமிழ்செல்வன், அந்தி மந்தாரை, தாஜ்மகால், கடல் பூக்கள், ஈரநிலம், கண்களால் கைது செய், பொம்மலாட்டம், அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரியாதை ஆகிய தமிழ் படங்களையும், சீதாகொகா சிலுகா, யுவதாரம் புலிச்சின்டி, ஈதரம் இல்லலு, ஜமடகனி, ஆராதனா ஆகிய தெலுங்கு படங்களையும், சொல்வ சவான், லவவர்ஸ், சாவேரே வலி காடி ஆகிய இந்திப் படங்கள் என சுமார் 44 படங்களை இயக்கியுள்ளார்.

கல்லுக்குள் ஈரம் படத்தில் நடிகராக அறிமுகமான பாரதிராஜா, அதன் பிறகு நிழல்கள், தாவணி கனவுகள், இதயம், தந்துவிட்டேன் என்னை, காதல் வைரஸ், ஆயுத எழுத்து, ரெட்டை சுழி, பாண்டியநாடு, நினைத்தது யாரோ, குரங்கு பொம்மை, படை வீரன், சீதக்காதி, கென்னடி கிளப், நம்ம வீட்டுப் பிள்ளை, மீண்டும் ஒரு மரியாதை, ஈஸ்வரன், ராக்கி, மாநாடு, திருச்சிற்றம்பலம் ஆகிய இருபது படங்களில் நடித்திருக்கிறார்.

கே.பாக்யராஜ், ராதிகா, மணிவண்ணன், நெப்போலியன், நிழல்கள் ரவி, அருணா, விஜயசாந்தி, உஷா, கவுண்டமணி, கார்த்திக், ராதா, தியாகராஜன், ரேவதி உள்ளிட்ட பலரை திரையுலகில் அறிமுகம் செய்தவர், மகன் மனோஜ் கே.பாரதியை ‘தாஜ்மஹால்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி அந்தப் படத்தை இயக்கி தயாரித்தவர், ‘அல்லி அர்ஜுனா’ படத்தையும் மகனுக்காக தயாரித்தார்.

இவரின் சினிமா பங்களிப்புக்கு கிடைத்த விருதுகளும் ஏராளம். அதை பட்டியலிட்டால் மிக நீண்ட தொகுப்பே போடலாம். கிராமத்து மண்ணிலிருந்து கிளம்பி, தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட ஒரு புயல் போன்றவர் பாரதிராஜா. தன் கடைசி காலம் வரை சினிமாவில் ஒரு நடிகராகவும் இயங்கி வந்தார். இப்போது மரணம் அவருக்கு ஓய்வழித்துள்ளது. அவரது தனது கலையால் என்றும் வாழ்வார்.