தமிழ்நாட்டில் அரசியல் வரலாற்றில் திரை நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. தமிழ்நாடு முதலமைச்சர்கள் இருக்கையை திரைத்துறையை சார்ந்த மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரே பல ஆண்டுகளாக அலங்கரித்து வந்துள்ளனர்.
அதிலும் தனியே கட்சி தொடங்கி முதல் தேர்தலிலேயே எம்.ஜி.ஆர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கும் உத்வேகமாக அமைந்தது. இது ஒரு பக்கம் இருந்தால் சிவாஜி, பாக்யராஜ், டி.ஆர்.ராஜேந்தர், சரத்குமார், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களால் அரசியலில் பெரியளவில் வெற்றிபெற முடியவில்லை.
இந்தச் சூழலில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வென்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக உருவெடுத்துள்ளார். இதனால் மீண்டும் தமிழ்நாட்டின் அரசியல் திரைத்துறையை நோக்கித் திரும்பியுள்ளது.
இந்தச் சூழலில் தமிழ்நாட்டின் முன்னணி நடிகரான தனுஷ் அரசியலில் அடியெடுக்க முடிவெடுத்துள்ளதற்கான அறிகுறிகள் வெளிப்படையாகவே தெரிந்துவருகிறது. விஜய் பாணியில் தனது ரசிகர் மன்றத்துக்கு தனிக் கொடியை அவர் அறிமுகம் செய்த நிலையில், சமீபத்தில் அவரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகள் அரசியல் கட்சியின் மாநாடுபோல காட்சியளித்திருந்தது.
இந்த நிலையில், தனுஷ் நற்பணி இயக்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மூலம் அவரின் அரசியல் நுழைவுக்கான அச்சாரம் போடப்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. அந்த அறிக்கையில், தனுஷ் ரசிகர்களுக்கு கோவை சட்டமன்றத் தொகுதிகளில் நற்பணி இயக்கத்தைத் தொடங்கவும், உறுப்பினர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் சட்டமன்றத் தொகுதி வாரியாக நற்பணி இயக்கத்தை விரிவுப்படுத்தவும், உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் தனுஷ் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்டமாக, தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களாகப் பிரித்து மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்தியா முழுவதும் 55 தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக இதனை விரிவுபடுத்தவும் தனுஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.