சினிமா

அரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா? முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி!

webteam

’சர்கார்’ பட விவகாரம் தொடர்பான வழக்கில், ’’அரசின் கொள்கை முடிவை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா?’’ என நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. 

விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த படம், ‘சர்கார்’. இதில் அரசின் இலவச திட்டங்கள் விமர்சிக்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

அதில் அரசுக்கு எதிராக இருப்பதாகக் கூறப்படும் காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டாதால், அதில் அடிப்படை முகாந்திரம் இல்லை என மனுவில் முருகதாஸ் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, முருகதாஸுக்கு எதிராக புகார் அளித்த தேவராஜன் ஆஜராகி ’சர்கார்’ படத்தில் முருகதாஸ் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்று அமைத்த காட்சி, சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தெரிவித்தார். அத்துடன் இது தவ றான முன்னுதாரணமாக இருப்பதாகவும் கூறினார். 

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, பிரபலமானவர்கள் செய்தால் அது தப்பு, அதையே பிரபலமில்லாதவர்கள் செய்தால் தப்பில்லையா எனக் கேள்வி எழுப்பினார்.  இதைத்தொடர்ந்து வழக்கை இன்று ஒத்திவைத்ததுடன், அதுவரை முருகதாஸை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ’’அரசின் திட்டங்களை விமர்சித்து உள்நோக்கத்தோடு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. தணிக்கைக் குழு கண்களை மூடிக்கொண்டு சான்றிதழ் கொடுத்துள்ளது. அரசின் கொள்கை முடிவை எதிர்ப்பதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, ‘’அரசின் கொள்கை முடிவை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா?’’ என கேள்வி எழுப்பிய நீதிபதி, ’’படத்தில் வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருந்தால் தணிக்கை குழு அதிகாரிகளிடம் ஏன் விசாரிக்கவில்லை? எந்த இரு பிரிவினருக்கு இடையே படம் வன்முறையை தூண்டு வதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது? படைப்பாளிகளிக்கு கருத்து சுதந்திரம் இல்லையென்றால் நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோ மா?’’ என்று சரமாரியாகக் கேள்வி கேட்டார். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று 2.15 மணிக்கு ஒத்தி வைத்தார்.