மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வாவின் திருமணம் துபாயில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி நடந்தது. இதற்காக குடும்பத்தினருடன் நடிகை ஸ்ரீதேவி அங்கு சென்றிருந்தார். திருமண விழாவில் பங்கேற்ற அவர், அது முடிந்ததும், தான் தங்கி இருந்த ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டுக்கு திரும்பினார். அங்கு அவர் குளியலறைக்குச் சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது மறைவு இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 24 ஆம் தேதி வருகிறது. இதற்கான சிறப்பு பூஜையை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் நடத்த இருக்கிறார். சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில் இந்தப் பூஜை நடத்தப்படுகிறது.
ஸ்ரீதேவியின் நினைவு தினம் 24 ஆம் தேதிதான் வருகிறது என்றாலும் அவரது நட்சத்திரபடி வரும் 14 ஆம் தேதி திதி கொடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து சிறப்பு பூஜை நடக்கிறது.
இந்த பூஜையில், போனி கபூர், அவர் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் , போனி கபூரின் சகோதரர் அனில் கபூர், அவர் மனைவி சுனிதா கபூர் மற்றும் உறவினர்கள் கலந்துகொள்கின்றனர்.