baththa - shankar baththa - shankar
சினிமா

“தேசிய விருதுக்கு தகுதியான நடிப்பு..” பத்தா படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்திருக்கும் பத்தா படத்தை பாராட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

Rishan Vengai

இயக்குநர் சங்கர், பத்தா படத்தை மனிதநேயம் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய தரமான படமாக பாராட்டியுள்ளார். விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ் மற்றும் சாய்பிருத்திவ்ராஜின் நடிப்புகள் சிறப்பாக உள்ளன. சாய் அப்யங்கரின் இசை மற்றும் இயக்குநர் பாலாஜி தரணீதரனின் கதை அமைப்பு பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் `பத்தா'. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', `சீதக்காதி' போன்ற படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணியில் உருவாகியிருக்கும் மூன்றாவது படம் இது. ‘ஜெய் பீம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த லிஜோ மோல் ஜோஸ், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்திருக்கும் நிலையில், ஒளிப்பதிவு செல்வகுமார் SK, படத்தொகுப்பு ஆர்.கலைவாணன் ஆகியோர் செய்துள்ளனர். Star Studio18 மற்றும் பிரபல இயக்குநர் அட்லி, A for Apple Studios  மற்றும் Cine 1 Studios Production இணைந்து தயாரித்துள்ளனர்.

Vijay Sethupathi

அக்டோபர் 1ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான பத்தா திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களும், படத்திற்கு வரவேற்பும் கிடைத்துவருகிறது. இந்தசூழலில் தான் இயக்குநர் சங்கர் இப்படத்தை பாராட்டியுள்ளார்.

எக்ஸ்தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “பத்தா – ஒரு நல்ல கதை, மனிதநேயம், அருமையான நகைச்சுவை மற்றும் படம் முழுவதும் கைதட்டலுக்குத் தகுதியான பல தருணங்களைக் கொண்ட ஒரு நல்ல திரைப்படம். மிகச் சிறந்த நடிகர்கள் மற்றும் நடிப்பு, மேலும் ஒவ்வொரு முகத்தின் க்ளோஸ்-அப் காட்சியும் மிக அருமை.

விஜய் சேதுபதியின் நடிப்பு மிகச்சிறந்த தரம் மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பாக வந்துள்ளது. சிறுவன் சாய்பிருத்திவ்ராஜ் ஒரு தேசிய விருதுக்குத் தகுதியான நடிப்பை கொடுத்துள்ளார். அதேபோல லிஜோ மோல் ஜோஸ் மிகவும் இயல்பாகவும் நேர்த்தியாகவும் நடித்திருக்கிறார்.

சாய் அப்யங்கரின் பின்னணி இசை புதுமையாகவும் வழக்கத்திற்கு மாறாகவும் உள்ளது, அவரின் இசை சில காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. அப்பாவித்தனமும் உணர்ச்சியும் நிறைந்த பல நெகிழ்ச்சியான தருணங்கள். இத்தகைய தரமான பிளாக்பஸ்டரைத் தயாரித்ததற்காக தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.

இயக்குனர் பாலாஜி தரணீதரனிடமிருந்து மற்றுமொரு மறக்க முடியாத திரைப்படம்” என பாராட்டி பேசியுள்ளார்.