69th national film awards
69th national film awards  file image
சினிமா

69வது தேசிய விருதுகள் அறிவிப்பு: விருதுகளை அள்ளி குவித்த RRR! தமிழில் கடைசி விவசாயிக்கு 2 விருதுகள்!

Prakash J

2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள், இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுக்காக, நாடு முழுவதிலுமிருந்து 28 மொழிகளில் 280 திரைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த வகையில், தமிழ் மொழிக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது எம்.மணிகண்டன் இயக்கி விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருந்த ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் நடித்த நல்லாண்டிக்கு(இப்போது உயிரோடு இல்லை), ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதுக்கு ’சர்தார் உத்தம்’ திரைப்படம் தேர்வாகி உள்ளது.

அதுபோல் கன்னட மொழியில் ’777 சார்லி’யும், மலையாள மொழியில் ’ஹோம்’ என்ற படமும் சிறந்த படங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், சிறந்த திரைப்படத்திற்கான விருது மாதவன் இயக்கி நடித்த ’ராக்கெட்ரி’ படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருதுக்காக, ’காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

’புஷ்பா’ திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைகளுக்கான விருதை நடிகைகள் ஆலியா பட் மற்றும் கீர்த்தி சனான் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருது ’காஷ்மீரி பைல்ஸ்’ திரைப்படத்தில் நடித்த பல்லவி ஜோஷிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

’கங்குபாய்’ திரைப்படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலிக்கு, சிறந்த எடிட்டர் விருதும், ’சர்தார் உத்தம்’ திரைப்படத்திற்காக ஒளிப்பதிவாளர் விருது அவிக்கிற்கும், ’இரவின் நிழல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற மாயவா என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான விருது ஸ்ரேயா கோஷலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விருதுகளை தட்டிச்சென்ற ஆர்ஆர்ஆர்!

சிறந்த பொழுதுபோக்கு படம், சிறந்த ஆண் பின்னணி பாடகர் (கால பைரவா), சிறந்த பின்னணி இசை (கீரவாணி), சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் (வி.ஸ்ரீனிவாஸ்), சிறந்த நடன அமைப்பு (ப்ரேம் ரக்‌ஷித்), சிறந்த சண்டைக் காட்சி இயக்குநர் (கிங் சாலமன்) ஆகிய ஆறு பிரிவுகளின்கீழ் ’ஆர்ஆர்ஆர்’ படம் விருது பெற்று சாதனை படைத்துள்ளது.

இதுபோக திரைப்படம் சாராத குறும்படம் பிரிவில் ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் (கருவறை), சிறப்பு கல்வித் திரைப்படத்திற்கான விருது பி.லெனினுக்கும் (சிற்பிகளின் சிற்பங்கள்) அறிவிக்கப்பட்டன.