நடிகை ஓவியா நடித்து வெளியாகியுள்ள 90 எம்.எல் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள படம் '90 எம்.எல்'. இப்படத்திற்கு 'ஏ' தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. நடிகர் சிம்பு இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உருவான நிலையில் மார்ச் ஒன்றாம் தேதி வெளியான இப்படம் ஆபாச வசனங்கள், முத்தக்காட்சிகள் என பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் தமிழர் கலாச்சார பாதுகாப்பு பேரவையின் மாநில சட்ட ஆலோசகரும் வழக்கறிஞருமான பன்னீர் செல்வம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஓவியா நடித்த 90 எம்.எல் படத்தை தடை செய்ய வேண்டும் எனக் கோரி புகார் மனு அளித்துள்ளார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “சமீபத்தில் நடிகை ஓவியா நடித்து வெளியாகி உள்ள 90 எம்.எல் திரைப்படம் இளைஞர்களை சீரழிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா போதை பொருளை புகைப்பதும், அதன் மூலம் ஆனந்தம் கிடைப்பதாகவும் இளைஞர்களை கெடுக்கும் வகையில் உள்ளது. மத உணர்ச்சிகளை தூண்டும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த படத்தை இளம் சிறார்கள் தியேட்டரில் வந்து படம் பார்க்க தியேட்டர் உரிமையாளர்கள் தடுக்க வேண்டும். தமிழ் பெண்கள் வீரமானவர்கள். ஆனால் இந்த படத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் போல சித்தரிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.
இந்த படத்தில் நடித்த நடிகை ஓவியா, திரைப்பட இயக்குனர் உள்பட படத்தில் நடித்தவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். முன்னதாக , நேற்று இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிரணி சார்பில் நடிகை ஓவியா மீது புகார் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.