இன்று ஒரே நாளில் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் சுமார் 12 புதிய படைப்புகள் வெளியாகி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாகவே அமைந்துள்ளது. மாஸ் ஹீரோக்களின் மறு-வெளியீடுகள் ஒருபுறம் ரசிகர்களை உற்சாகப்படுத்த, மறுபுறம் புத்தம் புதிய கதைக்களங்கள் ரசிகர்களைத் திரையரங்குகளை நோக்கி இழுக்கின்றன. மொத்தத்தில், இந்த வெள்ளிக்கிழமை, சினிமா ரசிகர்களுக்கு மிகவும் கலகலப்பான மற்றும் கொண்டாட்டமான நாளாக மாறியுள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!
முதலில், இன்று திரையரங்குகளில் களமிறங்கியிருக்கும் புதிய படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்!
இன்று, சுமார் 10 புதிய திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன. இதில், பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், நடிகர் தனுஷ் மற்றும் க்ரித்தி சனோன் நடித்துள்ள இந்திப் படமான 'தேரே இஷ்க் மெய்ன்' அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அத்துடன், யூடியூபர் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் 'ஐபிஎல்' திரைப்படமும் இன்று வெளியாகி இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள ஆக்ஷன்-த்ரில்லரான 'ரிவால்வர் ரீட்டா'வும் திரைக்கு வந்துள்ளது. மேலும், உலகளவில் 54 விருதுகளைக் குவித்திருக்கும் கலைப் படைப்பான 'வெள்ளகுதிர', இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ள 'BP 180', கிராமிய டிராமாவான 'பிரைடே' மற்றும் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' உள்ளிட்ட பல படங்களும் இன்று திரைக்கு வந்துள்ளன.
புதிய படங்களைத் தவிர, மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் கொண்டாடும் வகையிலும் இன்று திரையரங்குகள் களைகட்டி உள்ளன. நடிகர் சூர்யாவின் 'அஞ்சான்' திரைப்படம் அதன் 10ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ரீ-எடிட் செய்யப்பட்டு இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும், நடிகர் அஜித் குமார் நடித்த பிளாக்பஸ்டர் படமான 'அட்டகாசம்' திரைப்படமும் இன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
அடுத்து, ஓடிடி தளங்களில் இன்று வெளியாகியுள்ளவை பற்றி பார்க்கலாம்...
திரையரங்கு வெளியீடுகளைப் போலவே, ஓடிடி தளங்களிலும் இன்று புத்தம் புதிய படங்கள் ரிலீஸாகி ரசிகர்களை வரவேற்கின்றன. நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'ஆர்யன்' இன்று முதல் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
இதைத் தவிர, பிக் பாஸ் பவித்ரா நடித்துள்ள 'ரேகை' என்ற வெப் தொடரும், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள 'The Pet Detective' என்ற திரைப்படமும் ஜீ 5 ஓடிடியில் வெளியாகின்றன. மேலும், தெலுங்குத் திரைப்படமான 'சசிவதனே' இன்று முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது.