97வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இம்முறை அதிக விருதுகளை குவித்துள்ள படம் Sean Baker இயக்கிய Anora. Actress in a Leading Role, Directing, Film Editing, Best Picture, Writing (Original Screenplay) ஆகிய ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
The Brutalist படம் Actor in a Leading Role, Music (Original Score), Cinematography ஆகிய மூன்று விருதுகளையும் Wicked படம் Costume Design, Production Design ஆகிய இரு விருதுகளையும், Dune: Part Two படம் Sound, Visual Effects ஆகிய இரு விருதுகளையும் வென்றுள்ளன. இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு அனுப்பக் கோரி, 29 படங்கள் Film Fedaration of Indiaல் சமர்பிக்கப்பட்டது. அவற்றில் `Laapataa Ladies', பா இரஞ்சித்தின் `தங்கலான்’, மாரி செல்வராஜின் `வாழை’, கிறிஸ்டோ தோமியின் `Ullozhukku', துஷாரின் `Srikanth’ ஆகிய ஐந்து படங்கள் இறுதி செய்யப்பட்டது. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் சார்பாக சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது அமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் இயக்கிய `லாப்பட்டா லேடிஸ்’. ஆனால், இப்படம் ஆஸ்கரின் ஷார்ட்லிஸ்டில் கூட இடம்பெறவில்லை.
ஆனாலும், இந்திய மொழிப் படங்கள் இரண்டு ஆஸ்கரின் ஷார்ட்லிஸ்டில் இடம்பெற்றது. முதலாவது சந்தியா சூரி இயக்கத்தில் ஷஹானா கோஸ்வாமி நடித்த 'சந்தோஷ்'. சிறந்த சர்வதேச திரைப்பட (INTERNATIONAL FEATURE FILM) பிரிவில் இங்கிலாந்து நாட்டின் சார்பாக அனுப்பப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்தியா சூரி இப்படத்தை இந்தி மொழிப் படமாக உருவாக்கினார். கணவரை இழந்த பெண், தன் கணவரின் போலீஸ் கான்ஸ்டபிள் பணியில் சேர்கிறார். அப்போது ஒரு பதின் வயது சிறுமியின் மரணத்தை விசாரிக்கும் பொறுப்பு அவருக்கு வருகிறது. இந்தக் களத்தை வைத்து இந்தியாவில் சாதிய கொடூரங்களையும், அதிகாரிகளின் கோர முகத்தையும் பதிவு செய்திருந்தது இப்படம். ஆஸ்கரின் ஷார்ட்லிஸ்டில் தேர்வாகிய 15 படங்களின் பட்டியலில் இப்படம் இடம்பெற்றாலும், நாமினேஷனுக்கு செல்லவில்லை.
அடுத்த படம் Adam J. Graves இயக்கத்தில் உருவான `Anuja'. BEST LIVE ACTION SHOT FILM என்ற பிரிவில் நாமினேட் ஆகியிருந்தது இந்த, இந்திக் குறும்படம். அமெரிக்கா சார்பாக உருவாக்கப்பட்ட இக்குறும்படத்திற்கு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உட்பட 10 பேர் தயாரிப்பாளர்கள். 95வது ஆஸ்கர் விருதுகளில், சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற The Elephant Whisperers தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர், Anuja குறும்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். எனவே எப்படியும் இந்தப் படம் ஆஸ்கர் வென்றுவிடும் என பலரும் கணித்தார்கள். ஆனால் Victoria Warmerdam இயக்கிய I'm Not a Robot என்ற டச் மொழிக் குறும்படம் ஆஸ்கர் வென்றுள்ளது.
இந்தியா சார்பில் எந்த படத்திற்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, ஆஸ்கர் ரேஸில் கடைசி வரை உறுதியாக இரண்டு இந்தி மொழிப் படங்கள் போட்டியிட்டன என்பது நாம் கவனிக்க வேண்டியது.