சினிமா

இனி எல்லோரும் ‘96’ ஜானுவாக மாறலாம்..!

இனி எல்லோரும் ‘96’ ஜானுவாக மாறலாம்..!

Rasus

சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள திரைப்படம் ‘96'. பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்துக்கு பல தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். படத்தில் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இதேபோல் இவர்களின் பள்ளிப்பருவகால கதாபாத்திரங்களில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கெளரி நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, த்ரிஷா ஜோடிக்கு இணையாக இவர்களின் ஜோடியும் பலராலும் பாராட்டப்படுகிறது.

விஜய்சேதுபதி, ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதேபோல த்ரிஷா ஜானகி தேவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இருப்பினும் படம் முழுக்க விஜய்சேதுபதியை ராமு என்றும் த்ரிஷாவை ஜானு என்றும்தான் அழைப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாக த்ரிஷாவையும் அவரது வயதையும் ஒப்பிட்டு வறுத்தெடுத்த சமூகவலைத்தள வாசிகள் இப்படத்தில் அவரின் நடிப்பை புகழ்ந்து தள்ளிவிட்டனர். “ இந்த ஒரு படம் போதும் த்ரிஷா.. உங்க ஹேட்டர்ஸ்க்கு” என்று த்ரிஷாவின் ரசிகர்களும் புகழ்பாடிவிட்டனர்.

படத்தின் எந்தவொரு இடத்திலும் த்ரிஷா ஆபாச உடையில் வரமாட்டார். படம் முழுக்க சுடிதாரும் அதற்கேற்ப துப்பட்டாவையும் மடித்து போட்டிருப்பார். இதுவே படத்தின் காதலை தூக்கிக் காட்டியது. இதனால் த்ரிஷா அணிந்திருந்த உடைகளும் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் ‘96’ படத்தில் த்ரிஷா அணிந்திருந்தை போன்ற உடைகளும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. இந்த உடைகள் தற்போது பேஷன் ஆகிவிட்ட நிலையில் ட்விட்டரில் இந்த உடையை த்ரிஷா ரசிகர்கள் தெறிக்க விட்டிருக்கின்றனர்.  #jannusattire போன்ற ஹேஷ்டேக்கையும் இதற்காக அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்களை நடிகை த்ரிஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மக்களின் மனங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப உடடினயாக அதே நிறத்தில் ஆடைகள் விற்பனைக்கு வந்துள்ளது இளம் தலைமுறை பெண்களை குஷிப்படுத்தியுள்ளது.

பொதுவாக மாஸ் ஹீரோக்களுக்கு வெறித்தனமாக ரசிகர்கள் இருப்பார்கள். ஹீரோக்கள் படத்தில் என்ன ஸ்டைலில் தாடி வைத்திருக்கிறார்கள். என்ன உடைகளை அணிகிறார்கள் என்பதை பார்த்து தாங்களும் அப்படியே பின்பற்றுவார்கள். எனவே படம் வெளியாகும் நேரத்தில் நடிகர்கள் அணிந்திருந்த உடைகளை போல ஆடைகள் விற்பனைக்கு வருவது அடிக்கடி நிகழ்வது உண்டு. சில வெறித்தனமான ரசிகர்கள் உடையோடு நடிகர்கள் பேசும் வசன மொழிகளையும் அப்படியே உச்சரிப்பார்கள். ஆனால் இப்போது நடிகை ஒருவரின் ஆடையும் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு த்ரிஷா படத்தில் அணிந்திருந்த உடைகளை போன்ற ஆடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதனை சிலர் ஆசைப்பட்டு வாங்கியும் செல்கின்றனர். உண்மையில் இப்படம் த்ரிஷாவுக்கு வெற்றியான படமாகவே பார்க்கப்படுகிறது.